என் - எனின், இதுவும் உயர்திணைப்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆண்மை என்னுஞ் சொல்லை முன்னடுத்த ஆண் மகன் என்னும் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னடுத்த பெண்மகள் என்னும் பெயர்ச் சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னடுத்த பெண்டாட்டி என்னுஞ் சொல்லும், நம் என்பதை அடுத்துவருகின்ற இகர ஐகாரஈற்று நம்பி, நங்கை என்னும் பெயர்ச்சொற்களும், முறைப் பொருண்மையைக் கருதாத மகன் மகள் என்னும் பெயர்ச்சொற்களும், மாந்தர் மக்கள் என்னும் பெயர்ச்சொற்களும், ஆடூஉ, மகடூஉ வாகிய அவ்விரு வகைச்சொற்களும், சுட்டெழுத்தாகிய அகரத்தை முதலாகவுடைய அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன் என்னும் அன்னீற்றுப் பெயர்ச்சொல்லும், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான் என்னும் ஆனீற்றுப் பெயர்ச்சொல்லும், இன்னும் அச்சுட்டெழுத்தை முதலாகவுடைய அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி எனப் பெண்டாட்டி யென்னும் பொருண்மை உணரவரும் பெயர்ச்சொல்லும், பொன்னன்னான், பொன்னன்னாள், பொன்னன்னார் என ஒப்புப்பொருண்மையோடு வரும் பெயர்ச்சொல்லோடு தொக்க பதினைந்துசொல்லும் மேற்கூறிய பெயரே போலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம், (எ - று.) (9)
1. ‘பெண்டன் கிளவி என்ற பாடமும் இருப்பதாகச் சேனாவரையர் உரையிலிருந்து தெரிகிறது. ஊரார் பெண்டென மொழிப (ஐங் - 113,) ‘என்னைநின், பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறு கற்பின்’ (கலி - 77) எனச் சான்றோர் கூறலின் ‘பெண்டு’ என்பதே பாடம் என்பர் நச்சினார்க்கினியர். |