என் - எனின், இதுவும் உயர்திணை யொருசார்பெயர்களை உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) எல்லாரும் என்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லும், எல்லீரும் என்று சொல்லப்படுகின்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னெடுத்த பெண்மகன் என்னும் பெயர்ச்சொல்லும் இவை மூன்றும் அவைபோலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம், (எ -று.) நாணுவரை யிறந்தாள் தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு. (10) |