என் - எனின், நிறுத்த முறையானே அஃறிணைப் பெயராமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) அது, இது, உது என்று சொல்லப்படுகின்ற சுட்டு முதற் பெயர்களும், சுட்டெழுத்தினை முதலாகயுடைய அஃது, இஃது, உஃது என்னும் ஆறு தொடர்மொழிக் குற்றியலுகரப் பெயர்களும், அவை, இவை, உவை என்று சொல்ல வருகின்ற சுட்டுமுதற் பெயர்களும், அச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ், உவ், இவ் என்னும் வகர வீற்றப் பெயர்களும், யாது யா, யாவை என்று சொல்ல வருகின்ற அவ்வினாப் பொருளிடத்து வரும் மூன்று பெயருமாக வரூஉம் பதினைந்து பெயர்களும், ஒருமை பன்மைப்பால் அறியவந்த அஃறிணைப் பெயராம், (எ - று.) (13) |