இதுவுமது
 

171.பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள்பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட
அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன.
 

என்  -   எனின்,  இதுவும்  அஃறிணை  யொருசார்ப்  பெயர்களை
நுதலிற்று.

(இ - ள்.)  பல்ல  பல  சில என்று சொல்லப்படுகின்ற பெயர்களும்,
உள்ள  இல்ல  என்னும்  பெயர்களும்,   உண்டது   உண்டன என்றாற்
போலவரும்    வினைப்பெயர்களும்,     கரியது    கரியன   என்றாற்
போலவரும்  பண்பினைக் கொண்ட  பெயர்ச்சொற்களும்,  ஒன்று பத்து
நூறு  ஆயிரம்   என்றாற்போலச்  சொல்லப்படுகின்ற இத் துணையென
வரையறை உணர்த்தும்  எண்ணுக்குறிப்பாற் பெற்ற
பெயர்ச்  சொற்களும், பொன்னன்னது  பொன்னன்ன  என்றாற்  போல உவமத்தினாற்  பெற்ற பெயர்ச்    சொற்களும்,    உட்பட   அக் கூறறொன்பதும் மேற்கூறிய பெயர்போலப்  பாலறிய வரும்  அஃறிணைப் பெயர்களாம், (எ - று.)

******************************************************************