என் - எனின், இஃது அஃறிணைப் பெயர்க்குப் புறனடை உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) அத்தன்மையன பிறவுமாகிய அஃறிணையிடத்துப் பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த எல்லாப் பெயர்களும் அவ்வஃறிணைக்குரிய பெயர்களாம், (எ - று.) (எ - டு.) ஆ, நாய், கழுதை, ஒட்டகம், புலி, புல்வாய் எனச் சாதி பற்றி வருவன வெல்லாங் கொள்க. நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்பன அவற்றின்பாற்படும். உண்டல், தின்றல் எனப் பால்காட்டாத தொழிற் பெயரும், கருமை செம்மை யெனப் பால்காட்டாத பண்புப் பெயரும், மற்றும் அவற்றுப்பாலே படும் எனக் கொள்க. மற்றையது, மற்றையன, பிறிது, பிற என்பனவுங் கொள்க. பிறவும் அன்ன. (16) |