விரவுப்பெயர் விரவுவினையானும் திணையறியப்படும் எனல்
 

176.நிகழூஉ நின்ற 1பலர்வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயி னான.
 

என்   - எனின், அவ்விரவுப்பெயர் தத்தம் மரபின்  வினையானன்றி,
விரவு   வினையானும்   திணையறியப்படும்   என   எய்தியதன்  மேற்
சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.)  நிகழ்காலத்தை  யுடைத்தாய்நின்ற   பலரை  யுணர்த்தும்
என்று    வரைந்தோதப்பட்ட   செய்யும்  என்னும்  சொல்  காரணமாக
அவ்விரவுப்பெயர்    உயர்திணை    யொருமைப்பாலென்பது  தோன்ற நிற்றலும் உரித்து ; யாண்டுமோ  எனின் ;  அன்று,  அத் தன்மைத்தான
முறைமையினையுடைய   சில  செய்யும்  என்னும் வினைச்சொல்லிடத்து,
(எ - று.)

(எ - டு.) சாத்தன் யாழெழூஉம்,  குழலூதும், பாடும் எனவும், சாத்தி
சாந்தரைக்கும் பூத்தொடுக்கும் எனவும் வரும்.

சாத்தனொடுங் கிடக்கும் என்பன,  அன்னமரபின்  வினையன்மையின்
திணை தெரியாவாயின.

இனி  வினையியலுள் வியங்கோளின்  பின்னர்ச் செய்யும் என்பதனை
இயைபின்றி  வைத்து  ஆராய்ந்ததனான்  வியங்கோள்  வினையினானும்
உயர்திணையொருமை    தோன்றும்    என்றும் கொள்ளப்படும்.

(எ - டு.) சாத்தன் யாழெழூஉக, குழலூதுக எனவரும்.

இத்துணையுங் கூறியது  விரவுப்பெயரது  பொது   விலக்கணம்  என
உணர்க.                                                 (19)


1. ‘பால்வரை கிளவி’  என்பது   இளம்பூரணர்,   நச்சினார்க்கினியர்
பாடம். பலர்  வரை  கிளவி என்பது பலர் பாலை வரைந்து உணர்த்தும்
சொல்   எனப்  பொருள்படும்.  அஃது   அன்னதாதலை  229   ஆம்
நூற்பாவான்   அறிக,   எனவே  பலர்   வரைகிளவி  என்ற  பாடமே
சிறப்புடைத்தாம்.

******************************************************************