விரவுப் பெயரது பெரும் முறையும் தொகையும்
 

177.இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லாம்
1நீயிர் நீஎனக் கிளந்து
சொல்லிய வல்ல பிறவும் ஆஅங்
கன்னவை தோன்றின அவற்றொடுங் கொளலே.
 

என்  -  எனின், விரவுப் பெயர்க்குப் பெயரும் முறையும் தொகையும்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  இருதிணைக்  கண்ணும்  வாளாது  இயன்று  வருதலான்
இயற்பெயரெனவும்,     ஓர்    சினைக்காரணத்தாற்      பெற்றமையிற்
சினைப்பெயர்    எனவும்,     சினையோடு     தொடர்ந்த    முதலை
யுணர்த்தினமையிற்    சினைமுதற்    பெயரெனவும்,     முறைமையாற்
பெற்றமையின்   முறைப்   பெயராகிய  சொல்லெனயும்,  ஓர்  காரணம்
இன்மையின்   வாளாது  தானெனவும், எல்லாமெனவும், நீயிரெனவும், நீ
எனவும்    ஆசிரியனால்  விதந்தோதப்பட்டன  வல்லாத  பிறவுமாகிய
பெயர்களிடத்து      இருதிணையிலும்     விரவும்    அத்தன்மையன
தோன்றுமாயின்    அவற்றோடுங்கூட     ஆசிரியன்    விதந்தோதின
பெயர்களை விரவுப் பெயராம் எனக் கொள்க, (எ - று.)

அப்பெயர்  பெயர்   ;   அம்முறை  முறை;  அத்தொகை  தொகை
என்பதாம்.

இயற்  பெயர்   முதலாக  முறைப்  பெயர்  ஈறாக  ஓதினவெல்லாம்
பலவெனினும், ஞாபக வகையான் ஒன்றெனப் பட்டன.

பிறவும்     என்றதனாற்   கொள்வன   யாவை  யெனின்,  குறவன்
இறவுளன்  குன்றுவன்  எனவும்,  காடன்   காடி  எனவும், நாடன் நாடி
எனவும்,  துறைவன் சேர்ப்பன்  தரையன் திரையன்  எனவும், ஒருமைத்
திணைப்பெயராய்  வருவனவும்,   ஆண்  பெண்  என்பனவும்  பிறவும்
இன்னோரன்னவும் போலும்.                                 (20)


1. ‘நீர்’ என்பது தெய்வச்சிலையார் பாடம்.

******************************************************************