என் - எனின் இதுவும் செப்பு வழுவமைதியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) செப்பென்று சொல்லப்பட்டது வழுவி வரினும் வரைந்து மாற்றப்படாது; எவ்விடத்தெனின் வினாப் பொருண்மையோடு பொருந்திய சொல்லிடத்து, (எ - று.) (எ - டு.) உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என நீ செல் என்றல் ஏவுதல்; உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என என் கால் முட்குத்திற்று என்றல் உற்றதுரைத்தல்: உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என என்கடனுடையார் வளைப்பர், பகைவரெறிவர் என்றல் உறுவது கூறல். செப்பே என்புழி ஏகாரம் பிரிநிலை. அதனைப் பிரித்து வழுவமைதி கூறினமையின், வினாவிற்கு வழுவமைதி இல்லையென்பது பெறப் பட்டது. வழீஇயினும் என்ற உம்மை இழிவுசிறப்பு. இம்மூன்று சூத்திரத்துள் முன்னையது வழுவற்க என்னும் விதி; பின்னைய இரண்டும் வழுவமைதி கூறியதென உணர்க. (15) |