என் - எனின், ஆண்மைப்பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்குரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆண்மையைக் கருதின பெயர்களெல்லாம் அஃறிணையுள் ஆண் ஒன்றற்கும் உயர்திணையுள் ஒருவற்கும் நிற்றல் பொருந்தின, (எ - று.) அவை ஆண்மை இயற்பெயர் எனவும், ஆண்மைச் சினைப்பெயர் எனவும், ஆண்மைச் சினைமுதற் பெயர் எனவும், ஆண்மை முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும். (எ - டு.) ஆண்மையியற்பெயர் - சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் என வரும். ஆண்மைச் சினைப்பெயர் - முடவன் வந்தது, முடவன் வந்தான் என வரும். ஆண்மைச் சினைமுதற் பெயர் - முடக்கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவரும். ஆண்மை முறைப்பெயர் - தந்தை வந்தது, தந்தை வந்தான் எனவரும். நுந்தை யென்பதும் அது. எந்தை என்பது தன்மை யடுத்தமையின் உயர்திணைப் பெயராம். (27) |