என் - எனின், பன்மைப் பெயரெல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்கு உரியவாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) பன்மையைக் கருதிய எல்லாப் பெயர்களும் அஃறிணைக்கண் ஒன்றும் பலவும், உயர்திணைக்கண் ஆண்பாலும் பெண்பாலும் என்று சொல்லப்படும் நான்கு பாற்கும் ஒரு தன்மைய, (எ - று.) பன்மை சுட்டிய பெயர் பன்மை இயற்பெயரும், பன்மைச் சினைப்பெயரும், பன்மைச் சினைமுதற்பெயரும் என மூன்று என்று உணரப்படும். ஈண்டுப் பன்மை என்றது இருதிணைப் பன்மையும் அன்று ; பலபால் மேலும் வருதலின் பன்மை என்றாராகக் கொள்க. (எ - டு.)பன்மை யியற்பெயர் - யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள் எனவரும். பன்மைச் சினைப்பெயர் - நெடுங் கழுத்தல் வந்தது, வந்தன, வந்தான், வந்தாள் என வரும். பன்மைச் சினைமுதற் பெயர் - பெருங்கால் யானை வந்தது, வந்தன, வந்தாள் எனவரும். ஈண்டு ஒன்றே என்றதனை அஃறிணை ஆண் ஒன்றினையும் பெண் ஒன்றினையுமாகக் கொள்க. பன்மைக்கும் அஃதொக்கும். உயிரில் ஒன்றும் பலவும் கொள்ளற்க. ஒருவர் என்பதனை உயர்திணை இருபால் மேலும் கொள்க. (28) |