என் - எனின், ஒருமைப்பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்குரியவாமாறுணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) ஒருமையைக் கருதின எல்லாப் பெயரும் அஃறிணையுள் ஒன்றற்கும் உயர்திணையுள் ஒருவற்கும் நிற்றல் பொருந்தின, (எ - று.) ஒருமைப்பெயர் ஒருமை யியற்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும், ஒருமைச் சினைமுதற் பெயரும் என மூன்று வகைப்படும். (எ - டு.)ஒருமை யியற்பெயர் - கோதை வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். ஒருமைச் சினைப்பெயர் - செவியிலி வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். ஒருமைச் சினை முதற்பெயர் - கொடும் புறமருதி வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். (29) |