செப்பு வினாவிற் குரியமரபு
 

16.

செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே.

 

என்  -  எனின்  செப்புவானொடு  வினாவுவானிடைக்  கிடந்ததோர்
மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று.

(இ - ள்)  செப்பின்கண்ணும்      வினாவின்கண்ணும்     சினைக்
கிளவிக்கும்,     முதற்கிளவிக்கும்     அவ்வப்பொருளுக்கு    அவ்வப்
பொருளேயாம்;  ஒன்றனோடொன்றைப்  பொருவிக்  கூறுமள விற்றாகிய
பொருள், (எ - று.)

(எ - டு.) கொற்றன்  மயிர்நல்லவோ  சாத்தன்மயிர்  நல்லவோ என
வினாவினவிடத்துக்  கொற்றன்மயிரிற்  சாத்தன்மயிர்   நல்ல,   சாத்தன்
மயிரிற் கொற்றன்மயிர் நல்ல என்று இறுக்க.  பிறவுமன்ன,  இது சினைக்
கிளவி.  கொற்றனல்லனோ சாத்தனல்லனோ என  வினாவின  விடத்துச்
சாத்தனிற்  கொற்றன்  நல்லன்,  கொற்றனிற்   சாத்தன்   நல்லன்  என
இறுக்க. இது முதற்கிளவி.

சினையென்பது    உறுப்பு.  முதலென்பது அவ்வுறுப்பினை யுடையது.
அப்பொருளாகு   மென்றதற்குப்    பொருள்   சினைக்குச்   சினையும்,
முதற்கு  முதலும்   என்பதன்றி   அவ்வச்சினைக்கு   அவ்வச்சினையும்
அவ்வம் முதற்கு அவ்வம் முதலென்பது கொள்ளப்படும்.

சினை   முற்கூறியவதனான்   அவ்வச்  சினைக்கு  அவ்வச்  சினை
கூறாது முதலொடு கூறுதலும் உள என்பது கொள்ளப்படும்.

(எ - டு.) இவள் கண் நல்லவோ கயல் நல்லவோ என வரும்.

உறழ்பொருளென்னாது     துணையென்    றவதனால்   உவமத்துக்
கண்ணுஞ்   சினைமுதல்கள்   தம்மின்  மயங்காமற்   கூறுக   என்பது
கொள்ளப்படும்.  இன்னும்  அதனானே  அச்  சினைமுதற்பொருள்களை
யெண்ணுமிடத்தும்     இனமொத்தனவே     எண்ணுக    என்பதூஉங்
கொள்ளப்படும்.

உவமம், வினை பயன் மெய் உரு என நான்கு வகைப்படும்.

(எ - டு.)  புலி  பாய்ந்தாங்குப்   பாய்ந்தான்,  மழைவண்கை,  துடி
போலும் இடை, பொன்போலு மேனி எனவரும்.

இவற்றுள்  சினை   முதல்   மயங்கக்   கூறினவும்   இவ்விலேசான்
அமைத்துக் கொள்ளப்படும்.

இனி  எண்;   முத்தும்,   மணியும்,   பவளமும்,  பொன்னும்  என
எண்ணுக. இதற்கு அமைதியுண்டேனுங் கொள்க.

இச்சூத்திரத்தாற்   சொல்லியது செப்பினையும்  வினாவினையும்பற்றிப்
பொருவின்கண்ணும்,     உவமத்தின்கண்ணும்,      எண்ணின்கண்ணும்
பிறக்கும் மரபிலக்கணமும் மரபுவழூஉவமைதியும் என உணர்க.

பொருவென்பது   ஒன்றை  ஓன்றனோடு ஒக்குமென்பதன்றி அதனின்
இது நன்று என மிகுத்துக்கூறுவது. உவமம்  என்பது  ஒப்புணர்த்திலென
உணர்க.                                                (16)

******************************************************************