என் - எனின், நீயிர் நீ என்பனவற்றைத் திணைக்குரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) நீயிர் எனவும் நீ எனவும் வரூஉம் சொற்கள் திணை தெரிபில, உயர்திணையாயும் அஃறிணையாயும் உடனுணர்த்தலைப் பொருண்மையாக வுடைய, (எ - று.) மற்றுத் திணை தெரியாமையின் அன்றே விரவுப் பெயராயது ; இது சொல்லவேண்டுமோ எனின், மேல் விரவுப் பெயர்களைத் “தத்தம் வினையோடல்லது பால் தெரிபில” என்றமையின், இயையும். தத்தம் மரபின் திணையான் உணரற்பாடு சென்றமைகண்டு இவை முன்னிலைப் பெயராகலின் இவற்றுக்கு வரும் முன்னிலை வினையும் விரவாவாகலான் எய்தியது விலக்குதற்குக் கூறினார் என்பது. (இ - ள்.) நீயிர் வந்தீர், நீ வந்தாய் என்பன ; திணை கண்டு கொள்க. (34) |