என் - எனின், செய்யுள் இடத்து விரவுப் பெயர் வருவது ஓர் முறைமை கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) அச் செய்யுட்களில் கருப்பொருள் கூறும் வழி கிளக்கப்படும் இயற்பெயராகிய விரவுப்பெயர் உயர்திணை யுணர்த்தாது அஃறிணைப் பொருள் உணர்த்தும், அதற்குக் காரணம் என்னை எனின், அவ்வந் நிலங்களி னிடமாகிய இடத்து அவற்றுக்கு உறுப்பாய்த் தோன்றுதலான், (எ - று.) (எ - டு.) “கடுவன் முதுமகன் கல்லா மூலர்க்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி” என வரும். இவை அஃறிணையை நோக்கி நின்றன எனக் கொள்க, மற்று இவ்விரவுப் பெயர்கள் கருப்பொருள்களுள் அந்நிலத்து மக்கட்பெயராய் உயர்திணை மேல்வரின் என்னை குற்றம் என்றார்க்கு அவ்வம்மக்களை இவ்விரவுப் பெயர்களால் கூறுதல் சான்றோர் செய்யுட்கண் கண்டிலாமையின் அது மரபு அன்று என்றாரெனக் கொள்க. (42) |