என் - எனின் மரபு வழீஇ யமையுமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) தகுதியினையும் வழக்கினையும் பொருந்தி நடக்கு மிலக்கணத்திற் பக்கச்சொல் நீக்கு நிலைமையுடைய அல்ல, (எ - று). தகுதியென்பது மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலும், குழுவின்வந்த குறுநில வழக்கும் என மூன்று கூறுபடும். (எ - டு.) செத்தாரைத் துஞ்சினார் என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும் மங்கலமரபு. கண்கழீஇ வருதும், கான்மேனீர் பெய்துவருதும், கைகுறியராயிருந்தார், பொறையுயிர்த்தார், புலிநின்றிறந்த நீரலீரத்து, கருமுகமந்தி செம்பினேற்றை என்பன இடக்கரடக்கில் கூறல், பொற்கொல்லர் பொன்னைப் பறியென்றலும், வண்ணக்கர் காணத்தை நீல மென்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் குழுவின்வந்த குறுநில வழக்கு. வழக்காறு இலக்கணத்தொடு பொருத்திய மரூஉ வழக்கும், மரூஉ வழக்கும் என இருவகைப்படும். (எ - டு.) முன்றில், மீகண் என்பன இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கு. அருமருந்தன்னானை அருமருந்தன் என்றலும், நட்டுவியந்தானைக் நட்டுயந்தானென்றலும், பொதுவில் என்பதனைப் பொதியில் என்றலும், மலயமான் நாட்டை மலாடு என்றலும், சோழநாட்டைச் சோணாடு என்றலும் என இவை மரூஉவழக்கு. இவ்வாறு சொற்சிதையச் சொல்லுவனவன்றிப் படுபொருள் சிதையச் சொல்லுவனவும் மரூஉவழக்கு என்று கொள்ளப்படும். கரிய மயிரினைச் சிறு வெள்வாய் என்றும், களமருட் கரியாரை வெண்களமர் என்றும், புலைக்களமருட் செய்யாரைக் கருங்களமர் என்றும், நீரினையும் பாலினையும் ஒரோவழிச் சிலபல வென்றும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பு என்றுங் கூறுவன. இலக்கணவாய்பாடின்றி மருவிய வாய்பாடும் தாமே இலக்கணமாகக் கூறுவன இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ எனப்படும். இலக்கண வாய்பாடும் உள்வழிச் சொற்சிதையவும் வருவன மரூஉ வழக்கு எனப்படும். தகுதியென்பது பட்டாங்குச் சொல்லுதல் நீர்மையின்மை நோக்கி அவ்வாய்பாடுகளைந்து இவ்வாறு சொல்லுதும் என்று உடம்பட்டுச் சொல்லி வருவது. வழக்காறென்பது வழங்கற்பாடே மேற்கொண்டு ஒருகாரணம் நோக்காது வாய்பாடு பகுத்துப், பயிலச் சொல்லி வருவது. இச்சூத்திரத்தாற் சொல்லியது பரந்து பட்ட மரபு வழூஉக்களுள் சிலவற்றைப் பொருட்காரணம் பற்றியும், நன்மக்கள் தாம் பயிலவழங்குத லாகிய காரண வழக்குப்பற்றியும் வழுவமைத்தவாறு என வுணர்க. இவற்றுள் தகுதியென்றது பொருள்பற்றி யமைந்தது. வழக்காறு வழங்குதல்பற்றி யமைந்தது. யானை, யாறு, யாடு என்னும் இன்னோரன்ன வற்றை ஆனை, ஆறு, ஆடு என்னும் இன்னோரன்னவாகக் கூறுதலும் வழக்காறென இதனுட் கொள்ளப்படும். பிறவுமன்ன. அவை சான்றோர் சொன்ன செய்யுளுட் பெரும்பான்மை காணப்படாமையின் இதனுட் கொள்ளாது ‘கடிசொல் லில்லை காலத்துப் படினே’ (எச்ச-50) யென்புழிக் கொள்ளப்படும். (17) |