6. வினையியல்
வினைச் சொற்குப் பொது இலக்கணம்
 

201.

வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.
 

இவ்வோத்து  என்ன பெயர்த்தோ  எனின்,  வினையது  இலக்கணம்
உணர்த்தினமையின் வினையியல் என்னும் பெயர்த்து.
  

மேல்   ஓத்தினோடு இவ்வோத்திடை இயைபு என்னையோ வெனின்,
முன்னைப் பெயரியலுள் நிறுத்த முறையானே  பெயர் உணர்த்தி  அதன்
பின்னர் வினை உணர்த்திய தொடங்கினார் என்பது.
  

இதன்   தலைச்சூத்திரம்   என்   நுதலிற்றோ   எனின்,   வினைச்
சொற்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.)   வினைச்சொல்   என்று   சொல்லப்படுவத  அறுவகை
உருபினையு மேலாதே ஆராயும் கால், காலத்தொடு புலப்படும், (எ - று.)

(எ - டு.)  உண்டான்   என்பது  வேற்றுமை  கொள்ளாது   எனல்
வேண்டியது.
  

மேல்,   “கூறிய முறையில்” 1 என்ற சூத்தி....நின்றது பெயர்க்குயாதும்
ஆகாது  என்பதே  யன்றி  வினைக்காயின்  முதலும் இடையும் எல்லாம்
ஆம் என்பது கொள்ளக் கிடந்தமையின் அது விலக்கிய என்பது.
  

‘நினையுங்காலை’   என்றதனான் காலம் தன்னை மூன்று என்பாரும்,
தொழிலாவது பொருளினது புடை பெயர்ச்சியாகலின், அஃது  ஒருகணம்
நிற்பதல்லது  இரண்டு  கணம்  நில்லாமையின் நிகழ்ச்சி  என்பதொன்று
இல்லை   ஆதலின்   இறப்பும்   எதிர்வும்  எனக்  காலம்  இரண்டே
என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும்  எனப் பல
மதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது.                       (1)


1. வேற்றுமையியல் 18.  

******************************************************************