காலத்தின் பெயரும் முறையும் தொகையும்
 
  

203.இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே.

 

என் - எனின்,  மேல்  தொகை  கூறப்பட்ட  காலத்திற்குப் பெயரும்
முறையும்  தொகையும்  கூறி  அதுதான்  வினைக்குறிப்பிற்கும்  வினைச்
சொற்கும் உண்டு என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.)  இறப்பும் நிகழ்வும்  எதிர்வும் என்று சொல்லப் படுகின்ற
அம்முக்காலமும்    வினைக்குறிப்பொடும்   கொள்ளப்படும்   உண்மை
நிலையினையுடைய அவை தோன்றுமிடத்து, (எ - று.)
  

இறப்பு  நிகழ்வு  எதிர்வு  என்பன பெயர் முறை கிடந்த  முறையே.

(எ - டு.)  கரியன்  செய்யன்  என்பன.  இவை  ஆசிரியற்கே கால்
புலப்பட  நின்றமையின்  மேலைச்  சூத்திரத்து அடங்காது என்று வேறு
கூறப்பட்டது என்பது.
  

மெய்ந்நிலை     என்பது  வினைக்குறிப்புக்  காலத்தைத்  தெற்றென
விளக்கிக்  காட்டாமையான்  வினையல்ல  என்று  கருதினும்   கருதற்க;
இதுவும் வினையது இலக்கணம் மெய்ம்மையாக உடையது, எ - று.   (3)

******************************************************************