என் - எனின், வினைச்சொற்களது பாகுபாடு கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) குறிப்பு வினைத் தன்மையானும், தெரிநிலை வினைத் தன்மையானும், முறைமைப்படத் தோன்றிக் காலத்தொடு வருகின்ற வினைச்சொற்கள் எல்லாம் உயர்திணைக்கு உரியனவும் அஃறிணைக்கு உரியனவும் அவ்விரு திணைக்கும் ஒன்று போன்ற உரிமை உடையனவும் என அம் மூன்று கூற்றை உடைய தோன்று நெறிக்கண், (எ - று.) மேல் ‘குறிப்பொடுங்கொள்ளும்’ (சொல் -203) எனக் குறிப்பு இயைபுபற்றி நிற்றலிற் குறிப்பு முன் கூறப்பட்டது. வினைக் குறிப்பிற்கும் காலம் உண்டே என்பது வலியுறுத்தற்குப் பின்னும் காலமொடு தோன்றும் என உடன் கூறப்பட்டது. (4) |