என் - எனின், உயர்திணைத் தன்மை வினை உணர்த்தி அத்திணைப் படர்க்கை வினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார் என்பது. அப் படர்க்கை வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என இரு வகைத்து. அவற்றுள் ஒருமை வினை தான் ஆண்பால் ஒருமையும் பெண்பால் ஒருமையும் என இரு வகைத்து. அவ்விருவகை ஒருமையும் இதனாற் கூறுகின்றது என உணர்க. (இ - ள்.) அன், ஆன், அள், ஆள் என்று சொல்லப்பட்ட நான்கு ஈற்றுச் சொல்லும், ஒருவன் ஒருத்தி என்னும் ஒருமைப் பாலிடத்தில் படர்க்கையை உணர்த்தும் சொல்லாம், (எ - று.) முக்காலத்தும் உடன்பாடும் மறையும் என இரு வகையாய் வரும். அவற்றுள் அன்; உண்டனன், உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன்; உண்ணாநின்றிலன், உண்கின்றிலன்; உண்பன், உண்குவன் உண்ணலன் எனவரும். இனி ஆன்; உண்டான், உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான்; உண்ணா நின்றிலான், உண்கின்றிலான்; உண்பான், உண்குவான், உண்ணான் என வரும். இவை ஆண்பால் ஒருமை. இனி அள்; உண்டனள், உண்டிலள்; உண்ணாநின்றனள், உண்கின்றனள், உண்ணாநின்றிலள், உண்கின்றிலள்; உண்பள், உண்குவள், உண்ணலள் என வரும். இனி ஆள்; உண்டாள், உண்டிலாள்; உண்ணாநின்றாள், உண்கின்றாள்; உண்ணாநின்றிலாள், உண்கின்றிலாள்; உணபாள், உண்குவாள், உண்ணாள் என வரும். இவை பெண்பா லொருமை. இவற்றிற்கு உண்டனனல்லன், உண்டனனல்லான்; உண்டனளல்லள், உண்டனளல்லாள் எனப் பிற வாய்பாட்டால் வரும் மறையும் அறிக. (8) |