உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று
 
   

209.

அர்ஆர் பஎன வரூஉ மூன்றும்
பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.
 

என் - எனின்,   உயர்திணைப்   பன்மை படர்க்கை வினை ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.) அர்  ஆர் ப  என்று சொல்ல  வருகின்ற மூன்று ஈற்றுச்
சொல்லும்  பல்லோர்  இடத்துப்  படர்க்கை   உணர்த்தும்   சொல்லாம்
என்றவாறு.
  

இவற்றுள்  முன்னைய  இரண்டும்  மூன்று    காலத்தும்  வரும்.  

(எ - டு.)  அர்  :-  உண்டனர்,   உண்டிலர்;   உண்ணாநின்றனர்,
உண்கின்றனர்;  உண்ணாநின்றிலர்,  உண்கின்றிலர்; உண்பர், உண்குவர்,
உண்ணலர் என வரும்.
  

ஆர்  :-  உண்டார்,  உண்டிலார்;  உண்ணாநின்றார்,  உண்கின்றார்;
உண்ணாநின்றிலார்,  உண்கின்றிலார்; உண்பார்,  உண்குவார், உண்ணார்
என வரும்.
  

இவற்றிக்கு உண்டனரல்லர்,   உண்டனரல்லார்  என  வரும்  மறை
விகற்பமும் அறிக.
  

இனிப் பகரம் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும்.  

(எ - டு.) உண்ப, உண்குப என வரும்.  

இஃது உண்ணாநிற்ப என நிகழ்காலத்தும் வரும்.  

இதற்கு எதிர்மறை வாய்பாடும் உண்டேல் அறிக.  

இனி   ஒழிப,  தவிர்ப  எனச்  சலி  வினைக்கண் மறை வாய்பாடும்
உண்மை    அறிக.    உண்ணாதொழிப    என்னும்   மறை   தானே
ஏனையவற்றிக்கு மறை ஆமாறும் அறிக.
                       (9)

******************************************************************