என் - எனின் இதுவும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் மரபுவழீஇ யமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தமக்கு இனஞ் சுட்டுதலில்லாத பண்பு கொண்டு நின்ற பெயர்ச்சொற்கள் வழக்கினகத்து நெறியல்லாத, செய்யுட்கு நெறியாம், (எ - று.) வழக்காறாவன பெருங்கொற்றன், பெருங்கூத்தன் என்றாற் போல்வன; இவை சிறியானொருவனை நோக்கி வந்தனவல்ல பண்பின்றி உயர்த்திச்சொல்லிய என்பது. இனிச் செய்யுளாறாவன ‘மாக்கடல் ` நிவந்தெழு செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ’ (புறம்-4) எனவும், ‘நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே’ (அகம்-2) எனவும் 1 ‘வெண்கோட்டியானைச் சேரனைப் பாடியும், (குறு-) எனவும் வரும். கருஞாயிறும், குறுங்கருங் திங்களும், கருங் கோட்டி யானையும் உண்மை கண்டு சொல்லினானல்லன் என்பது. வழக்கினுள் பண்புகொள்பெயர் வருங்கால் குணமின்றி விழுமிதாகச் சொல்லவந்து நிற்கும்; செய்யுளுள் வருங்கால் குணம் தன்கணுடைய வாய் வந்து நிற்கும். இடுகு கவுண்மடப்பிடி என்றும், நால்வாய் வேழம் என்றும், மறப்புலி என்றும், மடப்பிணை என்றும், வடவேங்கடந் தென்குமரி என்றும் இனனில் பண்புகொள் பெயரேயன்றி, இனனில் தொழில்கொள் பெயரும் இனனில் பெயர்கொள் பெயருமாய் வருவன வுளவோவெனின் அவ்வாறு வருவனவற்றையும் ஒன்றினமுடித்தலென்பதனான் இதன் அகத்துச் செய்யுள் விதியாக அமைக்கப்டும். பண்புப்பெயரென்னாது பண்புகொள்பெயரென்றார்; கரியது, கரியன எனப் பண்பினைப் பிரியாது வருவன வொழியப் பண்பினைக்கொண்டு செஞ்ஞாயிறு எனவும், பண்பினைக்கொள்ளாது ஞாயிறு எனவும் வருவனவற்றின் மேற்று இவ்வாராய்ச்சி யென்றறிக வென்பது. இவ்வாறு பண்புகொள் பெயரென்று கூறவே குறுஞ்சூலி; குறுந்தகடி, குறுமூக்கி, செம்போத்து என்பன அப்பண்பினைப்பற்றி அச்சூலி, தகடி, மூக்கி, போத்து என்று வழங்குதலின்மையின் அது வாளாது பெயரெனப்படும். இதனாற் சொல்லியது வழக்கிடத்தும், செய்யுளிடத்தும், பண்பிடனாகப் பிறப்பதோர் வழுவமைதியும், பண்புபற்றிய பிறக்கும் இனனில் விதப்பும் இனனுடைய விதப்பும் என்னும் இருவகைச் செய்யுள் விகாரமுஞ் சொல்லியதென உணர்க. செஞ்ஞாயிறு என்புழிச், செம்மையென்னும் பண்பிற்கு, கருமை வெண்மை என இனமுளவே யெனினும் ஞாயிறோடு அடுத்தமையான் இனமின்றாய் இனனில் விதப்பாயிற்று. ஞாயிறு என்பது இனமில வேனும் செம்மையென்னும் பண்படுத்தமையின் கரியதும் ஒரு ஞாயிறுள்ளதுபோல இனமுடைத்தாய் இனனுடை விதப்பாயிற்று. (18)
1. வெண்கோட்டியானைச் சோனைபடியும் என்பதும் பாடம். |