என் - எனின், விரித்துக் தொகுத்தல் என்னும் இலக்கணத்தான் இவை உயர்திணைக்கு உரிய எனத் தெரிநிலை வினையைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த மூன்றனை முடியிலே உடைய இருபதும் மேற் கிளவியாக் கத்து முன்னுறச் சொல்லப்பட்ட உயர்திணையன ஆம். (எ - று.) மூன்று தலையிட்ட அந்நாலைந்து எனக் கொள்க. மூன்று தலையிட்டு என்றும் ஓர்,,,,,,,டு. உதாரணம் மேற்காட்டினவே கொள்க. அவ்விருப்பது மூன்றனுள் பன்மைக்கு உரிய ஈறு உளப்பாட்டுப் பன்மை ஈறு எட்டும், படர்க்கைப் பன்மை ஈறும் மாரும் உட்பட நான்கும் எனப் பன்னிரண்டாம். இவற்றுள் உளப்பாட்டுத் தன்மை ஈறு எட்டும் சொல்லுவான் பிற வினையும் உள்ளிட்ட மாத்திரமேயாய்த் தன்வினை கூறும் தன்மையன ஆகலிற் படர்க்கைப் பன்மை நான்கும் போலப் பன்மை சிறப்பின்மை அறிக. ஒருமை ஈறு:- தனித்தன்மை ஈறு ஏழும், படர்க்கை யொருமை ஈறு நான்கும் ஆகப் பதினொன்றாம். இப்பதினொன்றுள் அன் ஆன் என்னும் இரண்டும் ஆண்பாற்கே உரிய ஒருமை. அள் ஆள் என்னும் இரண்டும் பெண்பாற்கே உரிய ஒருமை. தனித்தன்மை ஏழும் இருபாற்கும் உரிய ஒருமை. ஆகலின் முன்னையனபோல ஒருமைச்சிறப்பில எனக் கொள்க. மேற் கூறுகின்ற மார் என்பதனோடு கூட உயர்திணை ஈறு இருபத்து நான்காம் எனக் கொள்க. இவ்வுயர்திணை ஈறு இருபத்து நான்கும் இவ்வீற்று வினைச்சொற்கட்கு முடிவாய் வரும். பெயர்க்கும், ஒன்றென முடித்தல் என்பதனால் ஈறாப் அவ்விடமும் பாலும் உணர்த்தும் என்பது கொள்ளப்படும். இவற்றைப் பெயர்ச்சொற்கும் ஈறாகப் பெயரியலுள் ஓதாதது என்னையெனின், இவையே அன்றிப் பிறவும் ஈறு உண்மையின் ஓதார் ஆயினார் போலும். அஃதேற் பிறவற்றையும் சுட்டி வரையறை செய்க எனின், அப் பிற ஈறுகள் நம்பி என ஆண்பால் மேனின்ற இகர ஈறு, அவ்வாட்டி எனப் பெண்பால் மேல்நின்றும்; நங்கை என நின்ற ஐகாரம் தந்தை என ஆண்பால் மேல் நின்றும்; ஆடூஉ என ஆண்பால் மேல்நின்ற ஊகாரம் மகடூஉ எனப் பெண்பால் மேல்நின்றும்; அவன் என ஆண்பால் மேல் நின்றனகரம் சாத்தன் என விரவின் மேல் நின்றும்; அவள் என நின்ற ளகரம் மக்கள் எனப் பன்மை மேல்நின்றும், அவ்வாறு மயங்கி வருதலின் வரை யறுக்கப்படா என்றொழிந்தான் போலும். (11)
1. ‘கிளந்த உயர்திணை’ என்பது பிற உறையாசிரியர்கள் கொண்ட பாடம். |