என் - எனின், நிறுத்த முறையானே உயர்திணை தெரிநிலைவினை உணர்த்தி அதன் குறிப்புவினை உணர்த்திய எடுத்துக் கொண்டார் என்பது. (இ - ள்.) ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட் பெயர்க் கண்ணும் ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட்பெயர்க் கண்ணும், உவமப்பொருட்பெயர்க்கண்ணும், கருமை முதலிய நிறப் பண்புப் பெயர்க்கண்ணும் என்று சொல்லப்பட்ட அந்நான்கு கூற்றுப் பெயர்க்கண்ணும் வருகின்ற வினைச்சொல், வினைக்குறிப்பாய்த் தோன்றும்; அவையேயன்றி, அன்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், இன்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், உண்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், வன்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், அத்தன்மை யினையுடைய பிற பண்புப் பெயர்களும், பிற பெயர்களும் அடியாக வருவனவுமாயுள்ளதைக் குறித்துக் கொள்ளப்படும் எல்லாச் சொல்லும் குறிப்பு வினைச்சொல்லாம், (எ - று.) அப்பால் காலம் என்பது ஆகுபெயரால் காலமுடைய வினைச்சொல் லினைக் குறிப்பாய்த் தோற்றும் என்பான் ‘குறிப்பொடு தோன்றும்’ என்றாராகக் கொள்க. இனி, அக்கூற்றுக் காலங் குறித்துக் கொள்ளப்படுமெனக் காலந்தன் மேலதாயும் படும். ‘குறிப்பே காலம்’ என்றது முன் குறிப்பொடு தோன்றும என்ற காரணத்தான் அச் சொற்கட்குக் குறிப்புவினை யெனப் பெயரிட்ட வாறாகக் கொள்க. ஈண்டுங் காலம் என்றது ஆகுபெயரான் வினை வினைக் குறிப்பு என்பதனோடும் குறிப்புவினை என்பதனோடும் வேற்றுமை இல்லை என வுணர்க. இதனாற் சொல்லியது ஒரு பொருட்கு உடைமையாகிய உடைமைப் பெயரும், ஒரு பொருள் நிகழ்தற்கு இடமாகிய இடப்பெயரும், ஒரு பொருளது குணமாகிய ஒப்புமைப்பண்பும் நிறப்பண்பும் குணப்பண்புமாகிய பண்புப் பெயரும், இன்னும் ஒரு பொருள் நிகழ்வதற் கிடமாகிய காலப்பெயரும், ஒரு பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பெயரும், ஒரு பொருளது உறுப்பாகிய சினைப்பெயரும் என இவ்வறு வகைப் பெயரும் அடியாக இவற்றொடு பாலும் காலமும் காலங்காட்டும் இடைச்சொற்களைக் கூட்டக் காலமும் குறித்துக் கொள்ளும் நீர்மையாய் வருவன எல்லாம் வினைக்குறிப்பு என்பான் பெரும்பான்மையனவற்றை எடுத்தோதி அல்லனவற்றை அன்ன பிறவும் என்றதனாற் கொள்க என்றான் என உணர்க. ஒப்புமைப்பண்பு குணப்பண்பினுள் அடங்காதோ எனின், அஃது ஒருபொருட்கண்ணே கிடப்பதன்றி அவ்விருபாற் பொருட்கண்ணும் கிடத்தலின் வேறு ஆயிற்றுப் போலும். பண்பென ஒன்றாக ஓதியனை ஒப்புமைப் பண்பு, நிறப்பண்பு, குணப்பண்பு எனப் பிரிக்கின்றது என்னையெனின், நிறப்பண்பு கட்புலம்; மற்றையன பிறபுலம் எனப்து கருதிப் போலும். குணப்பண்பு என ஒன்றாக ஓதாது அன்மை இன்மை எனப் பிரித் தோதியது என்னை எனின், இவை ஒரு பொருட்குப் பெயர் ஆகி நின்றுழி நன்மை தீமை என்பனவற்றோடு வேறுபாடுடைய என்றதனால் இவற்றின் மேல் வரவு பெரும்பான்மை என்றாதல் பிறவாதல் கருதிப் போலும். உடைமை என்றும் நிலம் என்றும் ஓதாது, வேற்றுமைப்பொருள்களை எடுத்து ஓதியது என்னை எனின், அப் பெயரடியாக வினைக்குறிப்பு வந்த வழி அவ் வேற்றுமைப்பொருளுணர்ச்சி உண்டு என்பது கருதிப் போலும். ......கலத்தோனெனப் பொருள் பற்றி வந்த தெரிநிலைவினையுடையவனென இரண்டாவதன் பொருண்மையன்றோ எனின், அன்று; சொன் முடிந்து நின்றவழி உணர்ச்சி அவ்வாறாயினும் உடைமைக்கு அடியாயுள்ளது ஆறாவது என்பது கருதிப்போலும். அறுவகைப் பெயராவன-பண்புப் பெயர். இடப்பெயர், காலப் பெயர், தொழிற் பெயர், சினைப் பெயர், உடைமைப் பெயர் என இவை. இவற்றிற் கெல்லாம் உதாரணம் இதன் ஈறு கூறுகின்ற மேலைச் சூத்திரத்துள் காட்டுதும். (16)
1. இவ்வுரையாசிரியரும் இளம்பூரணரும் நீங்கலாக ஏனைய உரையாசிரியர்கள் அனைவரும் இதனை இரு நூற்பாவாகக் கொண்டுள்ளார்கள். |