உயர்திணை வினைக்குரிய ஈறு
 

217.

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
 

என் - எனின்,  மேற்கூறிய   வினை,  வினைக்குறிப்பிற்கு  ஈறாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.)  பன்மையும்  ஒருமையும் ஆகிய பால்களை அறிய வந்த
அத்தன்மைத்தான்   மரபினையுடைய   காலங்  குறித்துக்  கோடலொடு
வரும்      வினைச்சொற்கள்      உயர்திணையிடத்து     மேற்கூறிய
தெரிநிலைவினையீறுகளோடு  ஈறு  வேறுபாடில, (எ - று.)
  

என்றது,  இவற்றின்கென   ஈறு  வேறில்லை  மேற்கூறிய  இருபத்து
மூன்று ஈறுமே இவற்றிற்கும் ஈறாவது என்றவாறு.
  

இருபத்து     மூன்று   சென்றதேனும்   இதுபொழுது காண்கின்றது
உளப்பாட்டுத்  தன்மையுள்   அம்  முதலிய  நான்கும், அத்தன்மையுள்
என்  ஏன்   என்னுமிரண்டும்,   படர்க்கையுள்  அன் முதலிய ஒருமை
நான்கும்,   அர்    ஆர்  என்னும்   பன்மையிரண்டும்,  அல்லனவும்
உளவேற் கொள்க.
  

(எ - டு.)   உடையம்,    உடையாம்;    உடையெம்,   உடையேம்;
உடையென்,     உடையேன்;    உடையன்,   உடையான்;   உடையள்,
உடையாள்; உடையர்,  உடையார்  என அதுச்சொல்வேற்றுமையுடைமை
வந்தவாறு.
  

இவற்றுள் ரகாரம்  முதலாகிய  ஈறுகள்  பெயர் நோக்கொழிய வினை
நோக்குள்வழிக் கொள்க.
  

இனிப்     பொருளுடையன்,  பொருளையுடையான்;  வில்லுடையன்,
வில்லையுடையான்   என்றாற்போல  இருசொல்லாய் வாராது பொருளன்,
வில்லன்   என்றாற்போல,   ஒரு  சொல்லாய்  வருதலும்,  அது   பல
பொருளன்,  வல்வில்லன்  என்றாற்போல்வன அடையடுத்து  வருதலுங்
கொள்க.
  

நிலத்தம்,     நிலத்தாம்;   நிலத்தெம்,   நிலத்தேம்;  நிலத்தினென்,
நிலத்தினேன்;   நிலத்தன்,  நிலத்தன்;  நிலத்தள், நிலத்தாள்;  நிலத்தர்,
நிலத்தார்  எனக்   கண்ணென்னும்  வேற்றுமை  வந்தவாறு.  இவற்றின்
விகற்பமும் அறிக.
  

பொன்னன்னம், பொன்னன்னாம்; பொன்னன்னெம், பொன்னன்னேன்;
பொன்னன்னென், பொன்னன்னேன்;  பொன்னன்னன்,  பொன்னன்னான்;
பொன்னன்னள், பொன்னன்னாள்;  பொன்னன்னர், பொன்னன்னார்  என இவை ஒப்புவந்தவாறு. இவற்றின் விகற்பமும் அறிக.
  

கரியம்,     கரியாம்; கரியெம், கரியேம்; கரியென், கரியேன்; கரியன்,
கரியான்;  கரியள்,  கரியாள்;  கரியர்,  கரியார்  என  இவை    பண்பு
வந்தவாறு.  இவை  ஒழியச்  செம்மை முதலிய  பண்பொடும்  இவ்வாறு
ஒட்டுக, இவற்றின் விகற்பமும் அறிக.
  

அல்லம்,    அல்லாம்; அல்லெம், அல்லேம்; அல்லென்,  அல்லேன்;
அல்லன்,  அல்லான்;  அல்லள்,  அல்லாள்;  அல்லர்,  அல்லார்  என
இவை  அன்மை  வந்தவாறு. இன்மை முதலியனவும்   இவ்வாறொட்டுக.
இவற்றின் விகற்பமும் அறிக.
  

வன்மை   என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு வன்மையும்
வலிமையும்  ஆக்கி  வல்லம்  வலியம்    என  இருவாற்றானுமொட்டுக.
நல்லம்,   தீயம்,   சேயம்,   அணியம்   எனப்    பிற   பண்போடும்
எல்லாவீற்றையும் ஒட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக.
  

ஓராட்டையம்,     ஒரு திங்களம், ஒரு நாளம் என  எல்லாத் காலத்
தோடும்  எல்லா  ஈற்றோடும்  ஒட்டுக.  ஊணம்,   தீனம்,  செலவினம்,
வரவினம் என  எல்லாவற்றோடும், எல்லா ஈற்றோடும் ஒட்டுக, முடவன்,
குருடன்,  செவிடன்  என  எல்லாச் சினையோடும்  எல்லா  வீற்றையும்
ஒட்டுக. இவற்றின் வாய்பாட்டு விகற்பமும் அறிக.
  

உடைமைப்  பெயரும், பண்புப்  பெயரும், காலப் பெயரும், தொழிற்
பெயரும், சினைப் பெயரும் வந்தவாறு.                        (17)

******************************************************************