என் - எனின், நிறுத்த முறையானே உயர்திணை வினையும் வினைக் குறிப்புக் உணர்த்தி அஃறிணை வினை உணர்த்துதல் நுதலிற்று. அஃறிணை வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என இரு வகைத்து; அவற்றுள் பன்மைவினை உணர்த்திய தொடங்கினார் என்பது. ஒருமையன்றோ முன்னையதெனின், யாண்டும் ஒருமையை முன்கூறின் அதற்கோர் சிறப்புண்டுகொல் என்பதுபடும் என்று முந்துமொழிந்ததன் தலைதடுமாற்று என்பதோர் தந்திரவுத்தியும் உண்டாதலான் இவ்வாறு கூறினான் என்க. (இ - ள்.) அ, ஆ, வ என்று சொல்ல வருகின்ற ஈறுகளை யுடைய அக்கூற்று மூன்று சொல்லும் பலவற்றை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம், (எ - று.) (எ - டு.) உண்டன, உண்டில, உண்ணாநின்றன, உண்ணாநின்றில, உண்கின்றன, உண்கின்றில, உண்பன, உண்ணல, என அகரம் வந்தவாறு. இவ்வகரம் வருங்கால் உடன்பாட்டின்கண் னகர ஒற்றோடு கூடியும், மறைக்கண் லகர ஒற்றோடு கூடியும் அல்லது வாராதுபோலும். உண்ட, தின்ற, வந்த, போய என வருமால் எனின், அவை எல்லாக் காலங்களிலும் வராமையான் அந்நிகரனவற்றின் னகரம் செய்யுள் விகாரத்தால் குறைந்தது என்க. உண்ணா, தின்னா என ஆகாரம் வந்தவாறு. இதற்கு உடம்பாடு, எக்காலத்தும் இல்லையெனக் கொள்க. இதற்கு எதிர்காலமே உள்ளது, இதற்கு மறை உண்ணல என அகரத்தின் மறை எனக் கொள்க. உண்டன அல்ல, உண்டன இல்லை எனப் பிறவாய்பாட்டு மறையும் அறிக. (18) |