என் - எனின், ஒருமைப் படர்க்கையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒன்றனை உணர்த்தும் படர்க்கைச்சொல் தறடக்களை ஊர்ந்த குற்றியலுகரமாகிய ஈற்றெழுத்தினையுடைய சொற்களாம், (எ - று.) (எ - டு.) வந்தது, வந்திலது, வாராநின்றது , வாராநின்றிலது; வருகின்றது, வருகின்றிலது; வருவது, வாராது எனத் தகரம் வந்தவாறு. கூறிற்று, தாயிற்று என றகரம் இறந்த காலம்பற்றி வந்தவாறு. இது உண்டல், தின்றல் என்னும் எல்லாத்தொழிலொடும் ஓடாமையும் அறிக. தனக்கு என ஏற்ற மறையின்மையும் அறிக. குண்டுகட்டு கொடுந்தாட்டு என்பன டகரம். இது வினைக் குறிப்பின்கண் வருவ தெனக் கொள்க. மற்று இது வினைக்குறிப்பு ஓதும்வழி ஓதாதது என்னை எனின், மேல் குறிப்பினைத் தெரிநிலை வினையினோடு மாட்டெறியுமாகலான் இத்தெரிநிலையுள் அடங்கா உகரமில்லது கண்டு, ஆண்டு மாட்டேலாது என ஈண்டே கூறினாரென வுணர்க. இவ்வாறு பன்மையும் ஒருமையும் அறிவிக்கும் ஈறுகள் கிளவியாக்கத் துள்ளே ஓதினார் அன்றோ எனின், ஆண்டு இடவரையறையின்மையின் ஈண்டு அவற்றிற்கு இடம் வரையறுத்தவாறாகக் கொள்க. இக்கடாவும் விடையும் உயர்திணைப்படர்க்கை வினைக்கும் ஒக்கும் எனக் கொள்க. அவற்றுள் பாலுணர்த்தும் என்ற னகரவீறு தனித்தன்மைக்கண் என்னென்புழி இருபாற்கும் பொதுவாய் நின்றதால் எனின், ஆண்டும் ஒருமையு மென்னுந் துணையும் உணர்த்தியது எனக் கொள்க. அக்குறைபாடுகளான் அன்றே அவ்வெழுத்துப் பதினொன்றற்கும் படர்க்கைவினை யென இடம் வரையறுத்ததெனக் கொள்க. (19)
1. இளம்பூரணர் உரையில் ‘தடற’ என்ற பாடம் உள்ளது. சில ஏடுகளில் கல்லாடர்க்கும் இதுவே பாடமாகக் காணப்படுகின்றது. |