என் - எனின் உலகத்துப் பொருளெல்லாம் இருவகைப்படும்; இயற்கைப்பொருளும், செயற்கைப்பொருளும் என. அவற்றுள் இயற் கைப்பொருண்மேல் மரபிலக்கணம் வழாமற்சொல் நிகழற்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இயற்கை யாகிய பொருளை இத்தன்மைத்தெனச் சொல்லுக, (எ - று.) (எ - டு.) நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளியுளரும் எனவரும். இயற்கைப்பொருள் செயற்கைப்பொருளென்கிறது அவ்வியற்கை செயற்கையென்னும் பண்பினையோ அப்பண்படைந்த பொருளினையோ எனின், பண்படைந்த பொருளினை எனவுணர்க. அஃதேயெனின், இயற்கைப்பொருள் இது, செயற்கைப் பொருள் இது என வேறுபட நில்லாது, நிலம் வலிது என்ற வழக்கத்தானே கல்லு மிட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்டவிடத்து, நீர் நிலமுஞ் சேற்று நிலமும் மிதித்து அவ்வயினின்றானொருவன் அந்நிலமல்லாத நிலமிதித்தவிடத்து நிலம் வலிதாயிற்றென்றும் வருமாலெனின் ஒரு பொருடானே இயற்கையான பண்படுத்த விடத்து இயற்கை என்றும், செயற்கையான பண்படுத்தவிடத்துச் செயற்கையென்றும் பண்பால் வேறுபடுதலல்லது பொருளால் வேறல்ல என்று உணர்க. முன், நீர் நிலம் மிதித்தான் கூறும் வழக்கினுள் பொருட்கு உண்மை வகையான் வன்மையின்றே யெனினும், அவன் மனக்குறிப்புப்பற்றி, அதுவும் வன்மையாயிற்று என உணர்க. இவ்விலக்கணங் கூறிப் பயந்தது என்னையெனின், மேற்செயற்கைப் பொருளகத்து மரபுவழூஉ அமைத்தற் பொருட்டாய் உலகத்துப்பொருளை இயற்கை செயற்கை என இருபாகுபாடு செய்து அவற்றைக் கூறும் மரபிலக்கணம் அறிவித்தார் எனக் கொள்க. (19) |