என் - எனின், அஃறிணைத் தெரிநிலை வினை உணர்த்தி, அதன் வினைக்குறிப்புக் கூறுவான் இருபாற்கும் உரியதோர் குறிப்புணர்த்துகின்றாரென்பது. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட அஃறிணையிடத்து ஒருமை பன்மையாகிய இருபாற் பொருண்மைக்கு மிகுதி குறைவின்றி யொக்கும் என்று சொல்லுவர் ஆசிரியர்; அது யாது எனில் எவனென்று சொல்லப்படும் வினாப்பொருண்மையுடைய சொல்லினை, (எ - டு.) எவன் அது, எவன் அவை. இதனை மேற் கூறுகின்ற வினைக்குறிப்பொடு கூறாதது என்னை யெனின், இஃது ஈறுதிரியாது இருபாற்கும் ஏற்பது ஒன்றாகலின் வேறு கூறினார் என்பது. தெரிநிலைவினை யீறுகளே குறிப்பிற்கும் ஈறாம் என்று மாட்டேற்றுதற்கேலாதால் எனின், அவ்வாறு ஏலாமையினன்றே இது வேறு கூறியது என்க. இதனோடு அஃறிணை ஈறு ஏழென்பது பெற்றாம். இவ்வாறு னகரம் அஃறிணைப்பான்மேல் நிற்றலான் “னஃகா னொற்றே ஆடூஉ வறிசொல்” என்றவழிப் படர்க்கையிடத்து முற்றுச் சொற்கு ஈறாயவழித் திரிபின்றியுணர்த்தும் என்ற ரகாரம் யாரென்னும் வினாவின்கண் ஒருமைக்கும் உரித்தாய் நின்றதன்றோ எனின், அவையா கின்றவாறறிந்தது. (21) |