என் - எனின், அஃறிணை வினைக்குறிப்புணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இன்று, இல உடைய என்னும் சொற்களும், அன்று உடைத்து அல்ல என்னும் சொற்களும், நிறப்பண்புப் பெயரினைத் தனக்கடியாகக் கொண்ட சொல்லும், உள என் சொல்லும், நிறப்பண்பும் குணப்பண்பும் எனப்பட்ட இருவகைப் பண்புப் பெயரும் காரணமாக உளதாகிய அப்பண்டைந்த சினையொடு முதலை உணர்த்தும் சொல்லும், உவமப்பெயரைத் தனக்கு அடியாகக் கொண்டுவரும் சொல்லலொடு தொக்க அக்கூற்றுப் பத்துச் சொல்லும் காலங் குறித்துக் கோடலொடு வரும் வினைச்சொல் லாகக் கொள்ளப்படும், (எ - று.) (எ - டு.) இன்று :- இவ்வெருது கோடின்று. கோட்டினது இன்மை முதற்கு ஏற்றிக் கூறும் வழி இவ்வாறாய், இனி அக்கோடு தனக்கே இன்மை கூறும் வழி இவ்வெருதிற்குக் கோடின்று என ஒரு பொருள் முதற் கூறியானும், இவ்விடத்துக்கோடின்று என ஓரிடம் கூறியானும், இக்காலத்துக் கோடின்று என ஒரு காலம் கூறியானும் வரும். உடைய :- இவ்வெருதுகள் கோடுடைய. அன்று :- நாய் அன்று நரி. உடைத்து :- இவ்வெருது கோடுடைத்து. பண்புகொள் கிளவி :- செய்து, செய்ய. இது பொதுவாக ஓதினாராதலின் எல்லா நிறப் பண்பினோடும் ஒருமை பன்மைப்பட ஒட்டிக் கொள்க. உய :- உழுந்துளவெனக் குறிப்புணர்த்தியும் வரும். பண்பினாகிய சினைமுதற்கிளவி :- குறுங்கோட்டது, குறுங்கோட்டன: வெண்கோட்டது, வெண்கோட்டன என இருவகைப் பண்பும் பற்றி வரும். ஒப்பொடு வரூஉங் கிளவி :- பொன்னன்னது பொன்னன்ன எனவரும். (உடைமைப் பொருட்பெயர் முதலாய் அறுவகைப் பெயரினும் உடைமைப் பொருட்பெயர் ... ... .... ... ... ... என்ற வாய் பாட்டால் கொள்ளப்பட்டது.) அவ்வுடைமைதான் தற்கிழமையும் பிறிதின் கிழமையும் என்னும் இருவகையினும் வரும். இப்பொழுது மணியுடைத்து எனப் பிறிதின்கிழமை வந்தவாறு. இனி உண்டு உள என்றும், இன்று இல என்றும் ஒரு பொருள் தனது உண்மையும் இன்மையும் கூறும்வழி அன்றி, அப்பொருளினைப் பிறிதொரு பொருட்கண் உண்மையும் இன்மையுங் கூறிய வழி அது உடைமையாய் விடுமாகலால் இவற்றானும் உடைமைப் பொருள் பற்றி வருதல் கூறப்பட்டதாம். பண்புப்பெயருள் நிறப்பண்பு பற்றி வருதல் ‘பண்புகொள் கிளவியும்’ என்றதனால் பெறப்பட்டது. இனிக் குணப்பண்புப் பெயர் அன்று அல்ல என்பவற்றானும், ஒரு பொருள் தனது உண்மையும் இன்மையும் உணர்த்திவரும் உண்டு உள இன்று இல என்பனவற்றானங் கொள்ளப்பட்டது. உள என்று பன்மை வாய்பாடோதிய வதனால் அதன் ஒருமையாகிய உண்டு என்பதனையும் தன்னின முடித்தல் என்பதனால் கொள்க. நன்று, தீது, சேய்த்து, அணித்து என்னும் பிற பண்புகளை ‘இன்றில’ என வேறோதிய வாற்றானே ‘ஒன்றென முடித்தல்’ என்பதனால் கொள்க. இவற்றுள் உண்டு உள என்பவற்றிற்கும், உடைத்து உடைய என்பவற்றிற்கும், இன்று இல என்பனவற்றை எதிர்மறையாகக் கொள்க. இவைதம்மைச் சேரவைத்து ஓதானாயது செய்யுள்நோக்கிப்போலும். ஒப்புமைப் பண்புப்பெயர் ‘ஒப்பினானும்’ என்பதனால் கொள்ளப்பட்டது. சினைப்பெயர் ‘பண்பினாகிய சினைமுதற் பெயரும்’ என்பதனால் கொள்ளப்பட்டது. இனியிவண் ஈண்டுக்கூறாதன இடப்பெயரும் காலப்பெயரும் தொழிற்பெயரும் என மூன்றுமே; அவற்றை உயர்திணை வினைக்குறிப்பு ஓதியவழி 2 ‘அன்னபிறவும்’ என்று வைத்து, அதன் பின்னர்ச் சூத்திரத்தும்3 ‘அன்னமரபின்’ என்றோதினதால் கொள்ளப்படுமென் றுணர்க. வடாதுவேங்கடம், மூவாட்டையது, செலவிற்று எனவரும். இவற்றின் உதாரண வாய்பாட்டு விகற்பங்களும் அறிந்துகொள்க. இதன் பொருட்பெயர் முதல் அறுவகைப்பெயரினும் வரும் வரவினைத் தொகுத்தானும், விரித்தானும் ஓதாது, சிலவற்றை விரித்தும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றைக் கூறாதும் ‘அப்பாற்பத்தும் குறிப்பு’ என்று விட்ட கருத்து என்னை எனின், இவை பெரும்பான்மையன என்றவாறு. பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம். (22)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகச் கொள்வர் இளம்பூரணர். 2. வினையியல்-16 ஆம் நூற்பா. 3. வினையியல்-17 ஆம் நூற்பா |