அஃறிணை வினைக்குறிப்பிற்குரிய ஈறு
 

223.பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
 

என்  -   எனின்,   மேற்கூறிய  வினைக்குறிப்பிற்கு  ஈறு  ஆமாறு
உணர்ந்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பின்மையும்  ஒருமையுமான  பால்களை  அறிய  வந்த
அத்தன்மைத்தான  மரபினையுடைய  காலம்  குறிப்பாய்வரும்  வினைச்
சொற்கள், அஃறிணையிடத்து  மேற்கூறிய  தெரிநிலைவினை ஈறுகளோடு
ஈறு வேறுபாடில, (எ - று.)

1 மேற்கூறிய    அறுவகை ஈற்றுள் டகரவுகரம் ஈண்டு  மாட்டேற்றிற்
கேலாமையின்  ஆண்டே  கூறப்பட்டது.  அஃது  ஒழிந்து  ஐந்து ஈறும்
மேல் எடுத்தோத்தானும் இலேசானும் வந்தவற்றிற்கு  ஈறாயவாறு  கண்டு
கொள்க.

உடைத்து     எனவும், சிறிது  எனவும்,  கருங்கோட்டது   எனவும்,
குறுங்கோட்டது  எனவும்,  பொன்னன்னது  எனவும்,  வடாது  எனவும்,
மூவாட்டையது எனவும், உண்டிலது எனவும் தகரவுகரம் வந்தது.

செம்மற்று     எனவும், அன்று எனவும்,  குறுங்கோட்டிற்று எனவும்,
மேற்று  எனவும்,  வைகற்று   எனவும்,  செலவிற்று எனவும் றகரவுகரம்
வந்தது.

பொருள   எனவும், அல்ல எனவும், கரிய எனவும், கோட்ட எனவும்,
பொன்னன்ன எனவும், வடக்கண்ண எனவும்,  மூவாட்டையன   எனவும்,
செலவின எனவும் அகரம் ஈறாய் வந்தது.

இனி ஆகாரம்:  இம்மணி  நல்ல  என்னும்  உடம்பாட்டுக்குறிப்பிற்கு
மறையாக இம்மணி பொல்லா என வந்தவாறு கண்டு கொள்க.

“கதவவாற்  றக்கதோ  காழ்கொண்டஇளமுலை”   என்புழிக்   கதவ
என்பது  கதத்தினையுடைய என்னும்  பொருண்மைக்கண்  வகரம் ஈறாய்
வந்தவாறு கண்டுகொள்க.

மேல்    தெரிநிலைவினைக்கண் கூறிய டகரவுகரம் பூணை உடைத்து
என்னும்    பொருண்மைக்கண்    பூட்டு  எனவும்,  இடத்து   என்னும்
பொருண்மைக்கண் ‘வகைதெரிவான் கட்டேயுலகு’ எனவும், எந்நாளிடத்து
என்னும்   பொருண்மைக்கண்  ‘எந்நாட்டாகும்   நும்போரே’  எனவும்,
உண்மையை  உடைத்து என்னும் பொருண்மைக்கண்   உண்டு  எனவும்,
விளையுளை யுடைத்து   என்னும்   பொருண்மைக்கண்   ‘வேலியாயிரம்
விளையுட்டு   ஆக’   எனவும்,  குழிந்த   கண்ணையுடைத்து  என்னும்
பொருண்மைக்கண்   ‘குண்டுகட்டு’  எனவும்  பொருள்  இடம்   காலம்
பண்பு    தொழில்  உறுப்பு   என்னும்  அறுவகைப் பெயரும் அடியாக
வந்தவாறுகண்டுகொள்க.                                   (23)


1. வினையியல்-16 ஆம் நூற்பா

******************************************************************