என் - எனின், மேல் நிறுத்தமுறையானே முன்னிலைவினை உணர்த்து வான், அவற்றுள் ஒருமையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இ, ஐ, ஆய் என்று சொல்லவருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும் உயர்திணை ஆண்பாலும் பெண்பாலுமாகிய ஒருமைப்பாற்கும் அஃறிணை ஒருமைப்பாற்கும் மிகுதி குறைவின்றி ஒப்பத்தோன்றும், (எ - று.) ஒன்று என்றாரே எனினும் உயிருடைய ஒன்றன் மேலது பெரும்பான்மை என உணர்க. (எ - டு.) உண்டி என இகரவீறு எதிர்காலமே பற்றி வரும். உண்ணாநிற்றி எனச் சிறுபான்மை நிகழ்காலவரவு உண்டேனுங்கொள்க. இவ்வீற்று வினைக்குறிப்பு உண்டேனும் அறிக. ஐ - உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்பை, கரியை எனவரும். ஆய் - உண்டாய் உண்ணாநின்றாய் உண்பாய் எனவும், கரியாய் செய்யாய் பொல்லாய் எனவும் வரும். உண்ணாதி எனவும், உண்டிலே உண்ணாநின்றிலை உண்ணலை எனவும், உண்டிலாய், உண்ணாநின்றிலாய், உண்ணலாய் எனவும் வரும் மறை வாய்பாடும் அறிக. (25)
1. ஒருவர்க்கும், என்பது சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோரது பாடம். |