என் - எனின், முன்னிலைப் பன்மை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இர், ஈ,ர், மின் என்று சொல்ல வருகிற மூன்று ஈற்றுச்சொல்லும் உயர்திணைக்கண் பல்லோரிடத்தும் அஃறிணைக் கண் பலவற்றினிடத்தும் சொல்லுதலை ஒருதன்மையாக வுடைய என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.) (எ - டு.) இர் - உண்டிர் உண்ணாநின்றிர் உண்பிர் எனவும், கரியிர் எனவும் வரும். ஈர்:-உண்டீர், உண்ணாநின்றீர் உண்பீர் எனவும், கரியீர் எனவும் வரும். மின்:-உண்மின் தின்மின் என எதிர்காலமே பற்றிவரும். உண்ணா நின்மின் என நிகழ்காலவரவு உண்டேனும் கொள்க. இவ்வீறு ஏவற் கண்ணே வருவது எனக் கொள்க. உண்டிலிர் உண்ணாநின்றிலிர், உண்ணலிர் எனவும்; உண்டிலீர், உண்ணா நின்றலீர், உண்ணீர் எனவும்; உண்ணன்மின் எனவும் வரும் மறையும் அறிக. மேலைச் சூத்திரத்து எதிர்காலமொன்றினும் வரும் இகரம் முற்கூறினமையான் ஒழிந்தமுன்னிலையீறும் கொள்ளப்படும். அவையாவன:-மொழிக்கீறாம் எனப்பட்ட இருபத்துநான் கீற்றுள்ளும் எடுத்தோதியவையொழித்து ஒழிந்தன எனக்கொள்க. (எ - டு.) நட, வா, விரி, ஈ, கொடு, கூ, மே, கை, நொ, போ, வௌ என இவை உயிரீறுள் எடுத்தோதாதன. இவை முன்னிலை ஏவலொருமை. எடுத்தோதின இகர ஐகார வீற்றுள்ளும் அறியெனவும் உரையெனவும் ஏவற்கண் வருவனவும் அறிந்துகொள்க. உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், தெவ், தாழ், கொள்என இவை புள்ளியீறு பதினொன்றும் வந்தவாறு. ஊட்டு என்பது குற்றியலுகரவீறு. இதுவும் ஏவலொருமை. 1 ஆய் எனவும். இர், ஈர் எனவும், மின் எனவும் ஓதினமையின் யகர னகரங்களில் ஐகாரங்கொள்ளவெண் ... ... ... னின் அவை அவ் வெழுத்தீறன்றிச் சொல்வாய்பாடாய் வேறு வருதலின் இவை வேறாகக் கொள்ளப்பட்டன எனக் கொள்க. உண்ணும், தின்னும் எனப் பன்மைக்கண் உம்மீறு மகரவீற்றின் வேறுபாடாகக் கொள்க. லகரவீறு மறைக்கண் உண்ணல் என வரும். அல்லீறும், ஆலீறும் அழேல் என வரும் ஏலீறுங் கொள்க. ணகரவீற்றுள் உண்டுகாண், சொல்லிக்காண், வருங்காண் என்னும் காணீறும் கொள்க. உண்டுபார் என்பதோ எனின், அஃது ஒரு சொல்லாதலன்றி அத் தொழிலைச் செய்து அதன் விளைவை மேற்பார் என்னும் ஒருமை தோன்ற நிற்றலின் வேறு சொல் என்க. உண்டுகாண் என்பதும், இவ்வாற்றான் வேறன்றோ எனின், அது சொல்லுவான் கருத்தன்று என்க. அவன் வருவன்காண் என்பதோ எனின், ஆண்டு காண்டற்றொழில் கருத்தன்மையின் அசைநிலையாகல் தத்தம் குறிப்பானே வேறொரு பொருள் உடைத்தாகலான் எனக்கொள்க. உண்கிடு உண்கிடா என்பனவோ எனின் அவை சான்றோர் செய்யுட் கண் இன்மையிற் “கடிசொல் இல்லை காலத்துப் படினே” (சொல் - 442) என்பதனாற் கொள்ளப்படும். அது முன்னிலையாயவாறு என்னை எனின், இவற்றுள் உண்கிடு நீ எனப் பிற முன்னிலை போல் முற்றாய், முன்னிலைப் பெயர் கொள்வதன்றி அவனுண்கிடு என்றானும், யான் உண்கிடு என்றானும் பிற பெயர் வந்த பிற தொழிலினை நீ உடம்படு என்று முன்னிலை நீ்ர்மை தோன்றநிற்றலின் முன்னிலை யாயிற்றுப்போலும். இவற்றுள் உண்கிட என்பதொருவழி நீயுண்கிடா என முன்னிலைப் பெயர் கொண்டு நிற்றலும் உண்டு. இனி உண்ணுங்கோள் என்பதோ எனின், அது உண்ணுங்கள் எனக் கள்ளொடு, உண்ணும் என்பது அசைநிலையடுத்து உம் ஈறு மரீஇயவா றெனக் கொள்க. முன்னிலை ஈற்றுவகையெல்லாம் தொகுத்து நோக்க எழுத்துவகையான் இருபத்து நான்கீறும், சொல்வகையால் யகரவீற்றுள் ஆய் என்பதும், ரகரவீற்றுள் இர் ஈர் என்பனவும், னகரவீற்று மின் என்பதும், ணகர வீற்றுக் காண் என்பதும், மகரவீற்று உம் என்பதும், லகரவீற்றுள் அல், ஆல், ஏல் என்பனவும் ஆக முப்பத்து மூன்றாயின, பிறவாறு உளவேனும் அறிக. (26)
1. இப்பகுதி சிதைந்துள்ளது. |