முன்னிலை ஒழிந்த வினைகள்
 

227. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே.

என்  - எனின்,   விரவுவினை   யெட்டனுள்ளும்  முன்னிலைவினை
யொழித்து  ஒழிந்தனவற்றிற்கு  எய்தியதோர்  இலக்கணம்  உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.)   முன்னிலையொழித்து   எஞ்சிய    சொற்கள்   ஏழும்
மூன்றிடத்தும்  பொருந்தி  ஐந்துபாற்கும்  உரியவாம்,  அவை தோன்றும்
நெறிக்கண், (எ - று.)

அவ்வேழனுள்ளும்     மேற்    சிறப்புவிதியுடைய   வியங்கோளும்,
வினையெச்சமும்,  செய்யும்,  செய்த   என்பனவும்  ஒழித்து,  ஒழிந்தன
இன்மை   செப்பலும்    வேறென்கிளவியும்   செய்ம்மனவும்   என்னும்
மூன்றற்கும் ஈண்டு உதாரணம் காட்டுதும்.

(எ - டு.)  யானில்லை,  யானும்   நீயுமில்லை,  யானுமவனுமில்லை,
யானு   நீயுமவனுமில்லை,   யாம்    இல்லை,   நாமில்லை,  நீயில்லை,
நீயிரில்லை,  அவனில்லை,  அவளில்லை,   அவரில்லை,  அதுவில்லை,
அவையில்லை என இன்மைசெப்பல் வந்தவாறு.

யான்வேறு,     யானுநீயும்வேறு,      யானுமவனும்வேறு,    யானு
நீயுமவனும்வேறு,    நாம்வேறு,   யாம்வேறு,    நீவேறு,    நீயிர்வேறு,
அவன்வேறு,  அவள்வேறு,  அவர்வேறு, அதுவேறு,  அவைவேறு  என
வேறென் கிளவி வந்தவாறு.

யான்   செய்ம்மன, யானுநீயும்  செய்ம்மன,  யானமவனுஞ்செய்ம்மன,
யானும் நீயு மவனுஞ் செய்ம்மன,  நாம்  செய்ம்மன,  யான்செய்ம்மன, நீ
செய்ம்மன,  நீயிர்  செய்ம்மன,  அவன்  செய்ம்மன,  அவள்செய்ம்மன,
அவர்    செய்ம்மன,  அது   செய்ம்மன,  அவை   செய்ம்மன,  எனச்
செய்ம்மன வந்தவாறு.

செய்ம்மன   என  அகரவீற்றதே எனினும், யான் செய்ம்மன என்புழி
யான்செய்வேன் என்றும், நீ  செய்ம்மன  என்புழி  நீ செய்வை என்றும்,
அவன்   செய்ம்மன  என்புழி  அவன் செய்வன என்றும்  முற்றுச்சொல்
நீர்  மைத்  தாய்ப் பால்  காட்டும்  என்பது. இஃது இக் காலத்து இறந்த
வழக்கிற்று.

இடத்தொடு   என    வாளா    ஓதினமையின்   மூன்று   இடமும்
கொள்ளப்பட்டது.                                          (27)

******************************************************************