என் - எனின், இதுவும் மேல் எஞ்சியகிளவி என்று ஓதிய பொது விதியுட்பட்ட வினையெச்சம் என்பதற்கு வாய்பாட்டு வேற்றுமையும் முடிபு வேற்றுமையும் கூறுவான் தொடங்கி, அவ்வினையெச்சங்களுள் சிறப்புடைய வாய்பாடுகளைத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) செய்து என்பது முதலாகச் செயற்கு என்பது ஈறாக ஓதப்பட்ட அக்கூற்று ஒன்பது வாய்பாட்டதாம் முன் வினை யெஞ்சுகிளவி என்றோதப்பட்டது, (எ- று.) அவற்றுள் செய்தென்பது முதலாகச் செய்தென என்பதீறாக அந் நான்கும் இறந்தகாலத்தவாகலான் முன்னே உடன் வைக்கப்பட்டன. அவற்றுள் செய்தென்பது பெருவழக்கிற்றாகலின் அவற்றுள்ளும் முன் வைக்கப்பட்டது. அவற்றுள் செய்தென என்பது அவற்றிற்கு எல்லாம் சிறு வழக்கிற்று ஆதலானும், பிறவினையும் கோடலானும் பின்வைக்கப்பட்டது. இனிச் செய்யியர் என்பது முதலாகச் செற்கு என்பது ஈறாக ஐந்தும் எதிர்காலத்தவாகலானும், பிறவினையுங் கோடலுண்மையானும், பிறவினை கோடலுமுடைய செய்தென வினையின் பின்னர் உடன்வைக் கப்பட்டன. அவ்வைந்தும் எதிர்காலத்தவேனும் செய்யியர் செய்யிய என்னும் இரண்டும் வாய்பாட்டு வேற்றுமையல்லது பொருள் வேற்றுமையின்மையின் உடன்வைக்கப்பட்டன. செயின் என்பது வாய்பாட்டு வேற்றுமையோடு பொருள் வேற்றுமையும் உடைமையின் அவற்றின் பின்னர் வைக்கப்பட்டது. செய என்பது எதிர்காலத்ததே யன்றிப் பிற காலத்துஞ் சிறுபான்மை வருதலான் அதன்பின் வைக்கப்பட்டது. செயற்கு என்பது அவைபோல வழக்குப்பயிற்சி யின்மையின் எல்லாவற்றினும் பின்வைக்கப்பட்டது. இதன்முன் செய்தென்றோதிய வாய்பாடு குற்றியலுகரத்தால் ஆராயப்பட்ட கடதற என்னும் நான்கீறும், இகரவீறும், யகரவீறும் என அறுவகைப்பட்டது. அவ்வறுவகையுஞ் சய்தெனப் பொருண்மையால் ஒன்றாக வைக்கப்பட்டது. அஃதேல் செய்யூ, செய்பு, சய்தென என்பனவும் இதனுள் அடங்காவோ எனின், அவ்வாறு அடங்குமேனும் இவற்றிற்கு வேறுபாடு உண்டென்று அறிவித்தற்கு வேறோதினார் என்பது. யாதோ வேற்றுமை எனின், செய்தென்றதன் ஈறு செய்தல் என்னும் தொழிற்கண்ணே செய்து எனத் தகரவுகர வீறாயும், உண்டல் என்னுந் தொழிற்கண்ணே உண்டு என டகரவுகரவீறாயும், தின்றல் என்னும் தொழிற்கண்ணே தின்று என றகரவுகரவீறாயும், புகுதல் என்னுந் தொழிற்கண்ணே புக்கு எனக் ககரவுகரவீறாயும், ஓடல் என்னுந் தொழிற்கண்ணே ஓடி என இகரவீறாயும், தூவுதல் என்னும் தொழிற்கண்ணே தூய் என யகரவீறாயும் ஒரு தொழிற்கண்ணே வேறுபட வந்தவாறு. ஒரு தொழிற்கண்ணே வேறுபட வாராமையுடைய அத்தொழில் எல்லாவற்றிலும் உழூஉ எனவும், உழுபு எனவும், உழுதென எனவும்; உண்ணூஉ எனவும், உண்குபு எனவும், உண்டென எனவும்; தின்னூஉ எனவும்; தின்குபு எனவும்; தின்றென எனவும்; புகூஉ, புகுபு, புக்கென எனவும்; ஓடூஉ, ஓடுபு, ஓட்டென எனவும்; தூஉ, தூபு, தூய் எனவும் வேறுபடாது வருதலுடைமையின் வேறுகூறினார் என்பது, செய்யூ என்பதற்குச் செய்யா என்பதூஉம் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றெனமுடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். இதனை இறந்தகால விரைவுப்பொருட்டு என்பாரும் உளர். செய்து என்பதற்குச் செய்யாநின்று என்பதூஉம் ஓர் நிகழ்கால வாய்பாடு. அதுவும் ஒன்றெனமுடித்தல் என்பதனால் கொள்ளப்படும். இனிச் செய்யியர் என்பது மழை பெய்யியர் எழுந்தது என்பது. செய்யிய என்பது மழை பெய்யிய எழுந்ததது என்பது. செயின் என்பது மழைபெய்யிற் குளம் நிறையும் என்பது. இது நிகழின் அது நிகழும் என்னுங் காரணப்பொருள் பற்றி வரும். இதற்கு மழைபெய்தாற் குளம் நிறையும் என ஆல் என்பதும் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற்கொள்க. ‘நனவிற் புணர்ச்சி நடக்கலும்’ (கலி - 39 :35) என உம் ஈறாதலும் கொள்க. இதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற்கொள்க. மழை பெய்தக்கால் என்பதோ எனின் அது பின்னோதுகின்ற கால் என்னும் வாய்பாடெனக் கொள்க. மழை பெய்யுமேலும் மழை பெய்யுமேனும் என வரும் ஏல் ஏன் என்பனவோ எனின் அவற்றையும் இதன் குறிப்பென்று கோடலும் ஒன்று. அன்றியும் இவ்வெச்சப் பொருள்படுவன சில இடைச் சொல்லென்று கோடலும் ஒன்று. ‘ஒன்றானும் தீச்சொல்’ (குறள் - 258) என்புழி ஆனோ எனின், அதுவும் அப்பால் ஓரிடைச் சொல் என்றலும் ஒன்று. ஆயினும் என்னுஞ் சொல் ஆனும் என இடைக்குறைந்து நின்றது என்றலும் ஒன்று. ‘நுணங்கிய கேள்வியரல்லால்’ (குறள் , 419) என்புழி அல்லால் என்பதோ எனின் அன்றி என்னுஞ் செய்தெனெச்சக் குறிப்பிற்கு அதுவுமோர் வாய்பாடு என்பது. அல்லாவாயினென்பது பொருளாக்கி இதன் குறிப்பு என்பாரும் உளர். இனிச் செய என்பது மழைபெய எழுந்தது என்பது. மழைபெய்யக்குளம் நிறைந்தது என இறந்த காலத்துக்கண்ணும் வரும். மழை பெய்யக் குளம்நிறையும் என நிகழ்காலத்துஞ் சிறுபான்மை வரும். இவ்வெச்சந்தான் ஒருவழி மழை பெயக் குளம் நிறைந்தது எனக் காரணப்பொருளாயும், குளம் நிறைய மழை பெய்ததெனக் காரியப் பொருளாயும், மழைபெய எழுந்ததென அதற் பொருட்டென்னும் பொருட்டாயும், மழை பெய்யச் சாத்தன் வந்தான் என உடனிகழ்ச்சியாய் நிகழ்த்தற்கண் இடப்பொருட்டாயும் பிறவாற்றாயும் வரும் என்பது. இனி, ‘துன்னிப் பெரிய வோதினுஞ் சிறிய வுணரா’ (புறம் - 375) என்புழிப் பெரிய சிறிய என்பன பெருமை, சிறுமைப் பண்படியாக வந்தமையின் இவ்வெச்சத்தின் குறிப்பு என்றலும் ஒன்று. இவ்வெச்சப் பொருள் உரிச்சொல் என்றலும் ஒன்று. இனிச் செவ்வன் தெரிகிற்பான் எனவும், புதுவதினியன்ற அணியன் எனவும், புதுவது புனைந்த வெண்கை யாப்பு எனவும், பொய்கைப்பூப் புதிதீன எனவும், பெருங்கயைற்ற வென்புலம்பு எனவும், சிறுநனி நீ துஞ்சியேற்பினும் எனவும், ஒல்லைக்கொண்டான் எனவும், பிறவும் அகரவீறன்றிப் பிறவீறாய் வருவனவும் அவ்வாறே உரைக்கப்படும். இனிக் செயற்கு என்பது உணற்கு வந்தான் என்பது. இஃது அதற் பொருள்டென்னும் பொருள்பற்றி வரும். இது உணல் என்னும் தொழிற் பெயர் நான்காம் உருபு ஏற்றவாறன்றோ எனின், அதுவுமோர் வழக்குண்டு. பெயர்ப்பொருண்மை நோக்கியவழி அதுவாகவும், காலம் நோக்கியவழி வினையெச்சமாகவும் கொள்க. எற்றுக்கு என்பது இதன் குறிப்பு வாய்பாடாகக் கொள்க. (30) |