வினைமுதல் கொண்டு முடியும் வினையெச்சங்கள்
 

232. அவற்றுள்
முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின.
 

என்  -   எனின்,   அக்கூறப்பட்ட   எச்சங்களுள்   முதற்கணின்ற
மூன்றற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்கூறப்பட்ட  வினையெச்ச வாய்பாடுகளுள்  முதற்கண்
எடுத்தோதப்பட்ட   செய்து,    செய்யூ,   செய்பு  என்னும்   மூன்றும்
அவ்வெச்சவினையை     நிகழ்த்தின     கருத்தாவினது     வினையை
யுணர்த்துஞ் சொல்லினையே பின்பு முடிபாகக் கொண்டு முடியும், (எ -று.)

(எ - டு.)  உண்டுவந்தான்,  உண்ணூஉ வந்தான், உண்குபு வந்தான்
எனவரும்.

செய்தெனெச்சத்தின்    குறிப்பாகிய  இன்றி,  அன்றி  யென்பனவும்
‘தம்மின்  றமையா  நந்நயந்  தருளி’  (நற்-1)   எனவும்,  ‘தொல்லெழில்
வரைத்தன்றி  வயவுநோய்  நலிதலின்’   (கலி-19),  எனவும் வினைமுதல்
வினையாய் முடிந்தவாறு கண்டுகொள்க.                      (32)

******************************************************************