என் - எனின், இவ்வெச்சங்களுள் எடுத்தடுக்கியவழிப் படுவதோர் முறைமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பலவாற்றனும் வினையெச்சமாகிய சொற்கள் ஒரு சொல்லொடு ஒரு சொல்லாய் முறை முடியாதே பலவாயடுக்கி வரினும், முன்னின்ற எச்சம் முடியவே அல்லாதனவும் பொருள் முடிந்தனவாம், (எ - று.) (எ - டு.) உழுது உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான் எனவரும் உண்ணூஉ தின்னூஉ ஓடூஉப் பாடூஉ வந்தான் எனப் பிற எச்சங்களும் அடுக்கி வருவன கொள்க. ‘பன்முறையானும்’ என்றதனான் ஓரினத்து எச்சமே அன்றி, பல வினத்து எச்சங்களும் மயங்கி அடுக்குதலும் கொள்க. (எ - டு.) உழுதுகிழுதுண்பான், ஓடூஉ, பாடூஉ வந்தான் என்பன. இனிச் சொன் முறை முடியாது அடுக்கிவரினும் என்று சொற்கண் முறை முடித்தடுக்கலும் உண்டு என்பது போதரக் கூறிய அதனான் சொற்கண் முறை முடித்தடுக்கி வரினும் முன்னது முடியயே முடியும்; முடியாக்கால் முடிந்தனவும் முடிந்திலவாம் என்பது கொள்க. (எ - டு.) உழுது வந்தான் கிழுதுவந்தான், ஓடி வந்தான் பாடி வந்தான் என நின்றவழி முடியாதவாறு அறிந்துகொள்க. ஒன்றென முடித்தல் என்பதனால் பெயரெச்சம் அடுக்கிய வழியும் முன்னது முடிய முடியும் என்பது கொள்க. (எ - டு.) “நெல்லரியும் இருந்தொழுவர்” (புறம்-24) என்னும் புறப்பாட்டினுள் பாயுந்து எனவும், தூங்குந்து எனவும், தரூஉந்து எனவும், பாயும் எனவும், கெழீஇய எனவும், அடுக்கிநின்ற பெயரெச்சம் எல்லாம் ‘மிழலை’ என்னும் பெயர்கொண்டு முடிந்ததாம் என்று உணர்க. (35) |