பெயரெச்சம்
 

236. நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன உரிமைய
செய்யும்செய்த என்னும் சொல்லே.
 

என் - எனின்,  எஞ்சியகிளவி  என்று எடுத்தவற்றள்  வினையெச்சம்
உணர்த்திப்   பெயரெச்சமாகிய    செய்யும்   செய்த   என்பனவற்றிக்கு
முடிபுணர்த்துதல் நுதலிற்று.

(இ -  ள்.)   நிலப்பொருட்பெயரும்,     செயப்படுபொருட்பெயரும்
காலப்பொருட்பெயரும்,       கருவிப்பொருட்பெயரும்,     வினைமுதற்
பொருட்பெயரும்,     வினைப்பொருட்பெயருமாகச்      சொல்லப்பட்ட
அவ்வறுவகைப்  பொருட்பெயர்க்கு  ஒரு    தன்மையான உரிமையினை
யுடைய செய்யும், செய்த என்னும் இருவகைப்பட்ட, சொல்லும், (எ - று.)

(எ - டு.) நிலம்: அவன்   உண்ணும்  இல்லம்,  அவள்  உண்ணும்
இல்லம்,  அவர்  உண்ணும் இல்லம், அது  உண்ணும்  இல்லம்,  அவை
உண்ணும் இல்லம் எனவரும்.

பொருள்: அவனுண்ணும்    சோறு,     அவளுண்ணும்     சோறு,
அவருண்ணும் சோறு, அது உண்ணும் சோறு, அவை  உண்ணும்  சோறு
எனவரும்.

காலம்:  அவனுண்ணுங்காலை,              அவளுண்ணுங்காலை,
அவருண்ணுங்காலை,   அதுவுண்ணுங்காலை,   அவை யுண்ணுங் காலை
எனவரும்.

கருவி: அவனெறியுங்  கல், அவளெறியுங்  கல்,  அவரெறியுங்  கல்,
அது எறியும் கல், அவையெறியுங் கல் எனவரும்.

வினைமுதல்: உண்ணுமவன், உண்ணுமவள்,  உண்ணுமவர்  உண்ணு,
மது, உண்ணுமவை எனவரும்.

வினை:  அவனுண்ணுமூண்,   அவளுண்ணுமூண்,  அவருண்ணுமூண்
அதுவுண்ணுமூண், அவையுண்ணுமூண் எனவரும்.

இனி,  செய்த  என்பதற்கும்  இவ்வாறே யான்  உண்ட  இல்லம்,  நீ
உண்ட   இல்லம்,  அவன்  உண்ட  இல்லம்   என்றாற்போல   மூன்று
இடத்திற்கும்   இவ்விடத்து    வாய்பாட்டு    விகற்பங்களும்   அறிந்து
ஒட்டிக்கொள்க.

ஈண்டுச்  செய்யும்  என்பது  முற்றும்  எச்சமும் என இருவீற்றதாகும்
சிறப்புடைமையின் முற்கூறப்பட்டது.

மற்றுச்    செய்யும் என்பது ‘பல்லோர் படர்க்கை’ என்புழிக் கூறிற்றா
கலின் ஈண்டுக் கூறவேண்டா எனின்,  ஆண்டு முற்றாய  நிலைமைக்குக்
கூறியது;  ஈண்டு  அஃது   எச்சமாகிய  நிலைமைக்குக்  கூறியது  எனக்
கொள்க.  மற்று  அது   அவ்விருநிலைமையும்  பெயரொடு முடிய மேல்
அவ்வேறுபாடறியுமாறு  என்னை  எனின்,   முற்றாய்ப்  பெயர்கொண்ட
வழி    மற்றோர்   சொல்  நோக்காது    செப்பு    மூடியக்காற்போல்
அமைந்துமாறும்.   எச்சமாய்ப்   பெயர்   கொண்டக்கால்   அமையாது
மற்றுமோர் சொல் நோக்கிற்றுப் போல நிற்கும் என்பது.

இனி   முற்றாயவழி   உண்ணும்  என   ஊன்றினாற்போல  நலிந்து
சொல்லப்படும்   என்றும்,  எச்சமாயவழி   ஊன்றாது   நெகிழ   முடிபு
சொல்லப்படும் என்றுங் கொள்க.

அஃதேல்  “பல்லோர்  படர்க்கை”  என்புழிக்   கூறியது  முற்றிற்கு
என்றும்,  ஈண்டுக்  கூறியது எச்சத்திற்கு  என்றும்  பெறுமாறு  என்னை
எனி்ன்,    ஈண்டுச்     செய்த     என்பதனோடு    படுத்து   முடிபு
கூறிமமையானும்,

ஆண்டு    முற்றாயவழிக்    கொள்ளாதனபற்றி    விலக்கினமையானும்
பெறுதும் என்பது.

மற்று,  இம்    முற்று    நிலைமையையும்     எச்சநிலைமையையும்
இரண்டிரண்டாகப்   பகுத்தோதாதது    என்னை   எனின்,    பொருள்
வேற்றுமை யல்லது  வாய்பாட்டு  வேற்றுமையின்மையின்  கூறாராயினார்
என்பது.

இவ்  வறுவகைப்  பெயருள்ளும்  வினைமுதற்பெயரொழித்து   ஒழிந்
தவற்றிற்கெல்லாம் வினை முதற்பெயர்  முன்வந்தல்லது பொருள்முற்றாது
என்பதூஉம், வினைமுதற்பெயர் வருவழிப் பின்னின்ற  எச்சத்தோடு எழு
வாயாய்,  இயைகின்றதோ, பிறவேற்றுமையா   யியைகின்றதோ  என்னும்
விகற்பமும்,   ஈண்டு    வினைமுதற்பெயரேயன்றிப்      பிறபெயரோடு
முடிபாதற்குக்  காரணம்  ‘வினையே  செய்வது’  என வினையிலக்கணம்
கூறியவழி    வினைச்சொற்   குறிப்பாய்ப்  பிற  பெயரும் புக்கமையாது
என்பதூஉம், அவ்வெட்டனுள்  கடைக்கண்   இரண்டும்  ஒழிய  மற்றை
ஆறும் ஈண் டோதப்பட்டன என்பதூஉம் அறிந்து கொள்க.

யான்   ஆடை   ஒலிக்கும்   இல்லம்,   ஆடை   ஒலித்த   கூலி
என்றாற்போல்      வன      முடியுமாறு      என்னை      எனின்,
அவ்வினையிலக்கணத்துள்     இன்னதற்கு    இது    பயன்  என்னும்
அவ்விரண்டெனப்   பெயர்    வகையாகலின்    தன்னின    முடித்தல்
என்பதனாற் கொள்ளப்படும் என்பது.

“மற்றிந்நோய்  தீரும்   மருந்தருளாய்  ஒண்டொடீ”  எனவும், “நின்
முகங்  காணு  மருந்தினேன்  என்னுமால்” (கலித்.60) எனவும்  வருவன வாமாறு   என்னை   எனின்,    தீரும்  மருந்து   என்பது  தீர்தற்குக்
காரணமாகிய   மருந்து   என்றவாறு.   காண்டல்   காரணமாக  அதன்
காரியமாகப் பிறந்த மருந்தாதற்றன்மைய என்றவாறு.

இவ்வாறு   காரணப்பெயரும்    காரியப்    பெயருமாய்   வருவன
அவ்விலக்கணம் எட்டனுள்ளும்  அடங்காமையின்  ஒன்றென  முடித்தல்
என்பதனாற் கொள்ளப்படும்.

யான் செல்லும்  ஊர்,  யான்  போந்த  ஊர் என்பன நிலப்பெயருள்
அடங்கும்.

‘ஊர்களிறு  மிதித்த  நீர்’  எனவும்,  ‘நூலாக்   கலிங்கம்’  எனவும்,
‘எள்ளாட்டின  எண்ணெய்’ எனவும், உண்ட  எச்சில்  எனவும் வருவன
செயப் படுபொருளின் விகற்பமாக்கி அதனுள் அடக்கிக்கொள்க.

இவ்வாறு  வரும்   பிறபெயர்   விகற்பங்களும்  அறிந்து  அட்க்கிக்
கொள்க.

அவையாவன  தேரோடும்   புறம்,  ‘குண்டுசுனை  பூத்த  வண்டுபடு
கண்ணி’ (திருமுரு:199) என்றாற்போல்வன.

இனிச்   செய்யும் என்பது  செய்யா நிற்கும் எனவும், செய்த என்பது
செய்யாநின்ற    எனவும்    வரும்     வாய்பாட்டு     வேற்றுமையும்
தன்னினமுடித்தல் என்பதனாற்கொள்க.

இனிச்  செய்த  என்பதன்  குறிப்பாய் இன்ன அன்ன என்ன எனவும்
கரியசெய்ய எனவும் வரும்; இவையும் அதனாற்கொள்க.           (36)

******************************************************************