என் - எனின், செய்யும் என்பதற்கு இன்னும் முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறிய அறுவகைப் பெயரோடு முடிந்துவரு மிடத்துச் செய்யும் என்னும் சொல் முன் “பல்லோர் படர்க்கை” (சொல் - 229) என்றதற்கண் வரையப்பட்ட மூன்று கூற்றின் கண்ணும் உரிமையுடைத்து, (எ - று.) மூன்று கூற்றாவன பல்லோர் படர்க்கையும், முன்னிலையும் தன்மையும். அவையாவன : அவருண்ணும் இல்லம், அவருண்ணும் சோறு, அவர் ஓதுங்காலை, அவர் எறியுங் கல், உண்ணுமவர் வந்தார், அவருண்ணும் ஊண் - இவை பல்லோர் படர்க்கை. நீ யுண்ணும் இல்லம், நீயிர் உண்ணும் இல்லம், நீ உண்ணும் சோறு, நீ்யிர் உண்ணும் சோறு, நீ ஓதுங் காலை, நீயிர் ஓதுங் காலை, நீ எறியுங் கல், நீயிர் எறியுங் கல், உண்ணும் நீ வந்தாய், உண்ணு நீயிர் வந்தீர், நீ உண்ணுமூண், நீயிர் உண்ணுமூண் - இவை முன்னிலை. யானுண்ணும் இல்லம், யாமுண்ணும் இல்லம், நாம் உண்ணும் இல்லம், யானுண்ணும் சோறு, யாம் உண்ணும் சோறு, நாம் உண்ணும் சோறு, யானுண்ணுங்காலை, யாமுண்ணுங்காலை, நாமுண்ணுங்காலை, யானெறியுங் கல், யாமெறியுங் கல், நாமெறியுங் கல், உண்ணும்யான், வந்தேன், உண்ணும்யாம் வந்தோம், உண்ணும் நாம் வந்தோம், யானுண்ணுமூண், யாமுண்ணுமூண், நாமுண்ணுமூண் - இவை தன்மை. யானும் நீயும் உண்ணுமில்லம், யானுமவனும் உண்ணுமில்லம், யானும் நீயும் அவனும் உண்ணுமில்லம் என்றாற்போல வரும் வாய்பாடும் ஒட்டிக்கொள்க. இதனாற் சொல்லியது, செய்யும் என்பதற்கு முற்றாயவழி விலக்கிய இடங்கள் எச்சமாயவழி வரும் என இறந்தது காத்ததாயிற்று. (37)
1. ‘செய்யும் கிளவி’ என்பது தெய்வச்சிலையார் பாடம். |