என் - எனின், பெயரெச்சமும் வினையெச்சமும் தனித்தனி முடியு மாறு கூறிவிட்டு, இனி அவ்விரண்டற்கும் உடனெய்துவது ஓரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று (இ - ள்.) பெயரரெச்சமாகிய சொல்லும், வினையெச்சமாகிய சொல்லும் தொழிலினை எதிர்மறுத்துச் சொன்னவிடத்தும் அவ்வச் சொல்லாதற்பொருண்மை நிலையில் வேறுபடா, (எ - று.) (எ - டு.) உண்ணும் சாத்தன் என்பது உண்ணாச் சாத்தன் என வரும். செய்த என்பதற்கு இதுவே மறை கரியசாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், தீய சாத்தன் எனவும் வரும். பெயரச்சக்குறிப்பு மறைவிகற்பமும் அறிக. இம்மறைக் கண் உண்ணாசாத்தன் என ஆகார ஈறாறே நிற்கும், இவை பெயரச்சம். இனி, வினையெச்சம் உண்டுவந்தான் என்பது, உண்ணாது வந்தான் எனவரும். இவ்வெச்சம் சோறு உண்டாயிருந்தது எனவும், சோறு ஆவதாயிருந்தது எனவும் ஓர் சொல்லடுத்தபோது சோறி்ன்றி எனவும் வேறு குறிப்பு வாய்பாட்டதாம் எனக் கொள்க செய்யூ, செய்பு என்பனவற்றிற்கும் இதுவே மறை. இனிச் செய்தென என்பது முதல்வினையோடு முடிந்தவழி இம்மறையானே வரும். மழை பெய்தென மரங்குழைத்தது எனப் பிறவினையாய வழிச் செய்தென் எச்சத்து எதிர்மறையே தனக்கு மறையாய், மழைபெய்யாமல் மரங்குழையாதாயிற்று எனவரும். இனிச் செய்யியர் செய்யிய என்பன இரண்டற்கு மறைபடுவழித் தன்வினை பிறவினை என்னும் இரு வழியுஞ் செயவென்னெச்சத்தின் மறையானே முடியும். மழைபெய்யாமல் எழுந்தது, மழைபெய்யாமல் மரம் குழையாதாயிற்று. இனிச் செய்யிய என்பதற்கும் இவ்வாறே கொள்க. செயின் என்பதற்குச் சொற்றன்னான் மறையின்றி மழை பெய்யாவிடின் அறம்பெறாது, மழைபெய்யாவிடின் மரங் குழையாது எனப் பிற சொல்லானே மறையாய் வரும் போலும். உண்ண என்பதற்கு உண்ணாமல் எனவும், உண்ணாமை எனவும், அல்லும் ஐயும் என இரு ஈற்றதாம். உண்ணாமே என்பதோ எனின், அதுவும் மரூஉ என்க. இனிப் பெரிய ஓதினும் என்பதற்குச் சிறிய ஓதினும் எனவரும் குறிப்பு மறை விகற்பமும் அறிக. செயற்கு என்பதற்கு உணற்கு வந்தான், உண்ணாமல் வந்தான் என இதன் மறையே மறையெனக் கொள்க. உண்ணாதொழிவான் எனப் பிற வாய்பாடாயும் வரும். இனிப் பின் என்பது உண்ணாதபின் என வரும். முன் என்பது உண்ணாதமுன் எனவரும். கால் என்பது உண்ணாக்கால் எனவரும். கடை என்பது உண்ணாக்கடை எனவும், வழி என்பது உண்ணாதவழி எனவும், இடத்து என்பது உண்ணாவிடத்து எனவும் வரும். பான், பாக்கு என்றாற்போல்வன உண்ணாதொழிவான் என்றாற் போல வேறுவாய்பாட்டாய் வரும். மற்று மறை விகற்பமுள்ளனவும் அறிந்துகொள்க. இதனால் சொல்லியது இவ்வாறு பெயரெச்சமும் வினையெச்சமும் எதிர்மறுத்துவரும் என்பது போதரக் கூறினமையின் அதனுள் அடங்கிற்றென்பது..................வழியும் பெயரெச்சம் எனப்படுதலும் பெயரோடு முடிதலுடைய என்றாயிற்று. அஃதேல் முற்றுச்சொன் மறுத்தவழியும் முற்றென்பது எற்றாற் பெறுதும் எனின், வேற்றுமையிலக்கணத்துள் ‘எதிர்மறுத்து மொழியினும்’ என்பதுள் அவ்வேற்றுமையினை எதிர்மறுத்துவரும் என்பது போதரக்கூறினமையின் அடங்கிற்றென்பது. மற்று இவ்வெச்சமும் அதன்பால் அடங்காதோ எனின், எடுத்தோத் தில்வழியது இலேசும் உத்தியும் என்க. அஃறிணை வினையுள் ‘அஆ’ என்று ஆகாரவீற்றை ஓதினமையானும் மறையுமாம் என்பது பெறுதும். முற்றுச்சொல் எதிர்மறுத்தவழி உண்டான் என்பதற்கு உண்ணான் என ஈறு வேறுபடாது வருதலானும் உண்ணுமுன் என்பதற்கு உண்ணாத முன் என்றும், உண்ண என்பதற்கு உண்ணாமல் என்றும் எச்சங்கள் ஈறு வேறுபட்டுவருதலானும் அவை இயல்பு என்று விகாரமுடைமையின் இவ்வெச்சங்களை எடுத்து ஓதினார் என்றலும் ஒன்று. முற்றுச்சொன்மறைவிகற்பமெல்லாம் அவ்வீற்றுள்ளே காட்டியவாறு கண்டுகொள்க. இனிச் செய்யும் என்பது முற்றாயவழி அதன் எதிர்மறை ஆண்டுக் கூறும் உயர்திணை அஃறிணைப்பன்மைமேல் வினையாய் உண்ணும் அவன் என்பதற்கு உண்ணாவவன் எனவும், உண்ணும் அது என்பதற்கு உண்ணாதது எனவும் வரும் என்று அறிக. மற்று இவ்விரவுவினை வினைமுற்றாய் அவற்றில் தனக்கேற்ற வினையில்லன ஆண்டுணர்த்தும் உயர்திணை அஃறிணை வினையான் மறைபடுமாறறிந்துகொள்க. (38) |