மேலதற்கோர் புறனடை
 

21.

ஆக்கந் தானே காரண முதற்றே.
 

என் - எனின் மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  மேற்கூறிய  ஆக்கச்  சொற்றானே  காரணச்  சொல்லை
முன்னாகவுடைத்து (எ - று.)

(எ - டு.) கடுவுங்    கைபிழியெண்ணெயும்   பெற்றமையான்  மயிர்
நல்லவாயின,  எருப்பெய்து   இளங்களை  கட்டு நீர் கால்யாத்தமையாற்
பைங்கூழ் நல்லவாயின எனவரும்.

ஆக்கம்   முற்கூறிக்    காரணம்    பிற்கூறியும்    வருமாலெனின்
பெரும்பான்மையும்  முற்கூறிக் கூறப்படுதலின்  முதற்று என்றார்போலும்.
இனி முதல் என்பதனைக் காரணமாக்கிக் கூறுதலுமொன்று.        (21)

******************************************************************