என் - எனின், இவ்வெச்சங்களுள் செய்யும் என்னும் பெயரெச்சத்திற்கு ஈறு வேறுபட்டுக் கெடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறிய எச்சங்களுள் செய்யுமென்னும் பெயரெச்சத்திற்கு ஈற்றின்மேல் நின்ற உகரம் தன்னால் பற்றப்பட்ட மெய்யொடும் கெட்டு முடியும். அவ்வாறு கெடும் இடங்களை அறிக என்று சொல்லுவர் புலவர், (எ - று.) (எ - டு.) வாவும் புரவி வழுதி, யான் போகும் புழை என்பன வாம்புரவி, போம்புழை எனவரும். இனி உருவு திரை என்றாற்போல ஈறுதான் கெடுவனவும் உளவாலெனின், அது வினைத்தொகை என மறுக்க. “சாரல்நாட என் தோழியுங் கலுழ்மே” என அவ்வுகரந் தானேறிய மெய்யொழியக் கெட்ட விடம் உளவால் எனின், ‘அவ்விடனறிதல்’ என்ற மிகைவாய்பாட்டன் ஓரோவழி மெய்யொழியக் கெடுதலும் உண்டு என்பது கொள்ளப்படும். இனிச் ‘செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு’ என்றாரன்றே; மற்று அது, ‘அம்பலூரும் அவனொடு மொழிமே’ (அகம் - 51) என முற்றாயவழியும் வந்ததாலெனின் அதனையும் இவ்விலேசினாற்கோடலும் ஒன்று. இதனையும் உதாரணமாகக் கூறியது உரையிற் கோடலால் என்றலும் ஒன்று. இனி வாவும் புரவி என உகரங் கெடாது வருதற்கு விதி யாதெனின் “மெய்யொடுங் கெடாது வருதற்கு விதி யாதெனின் “மெய்யொடுங் கெடும்” என்ற உம்மை எதிர்மறையாகலான் மெய்யொடுங் கெடாது நிற்றல் பெரும்பான்மை என்பதூஉம் பெறப்படும். ஏற்புழிக் கோடல் என்பதனான் ஆடுநாகம் என்றாற்போல்வுழிக் கெடா மையும் கொள்க.(40) |