என் - எனின், செய்தென்னும் வினையெச்சத்துக் காலமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இறந்தகாலத்தையுடைய செய்தென்னும் வினையெச்சம் தன்னிறந்தகாலத்தினை நோக்க வாராதவாகிய இயல் பினையுடைய எதிர்காலத்தினையும் நிகழ்காலத்தினையும் பொருந்தும் கூற்றினையுடையது, (எ - று.) இயற்தகாலத்துச் செய்தெனெச்சம் என மொழிமாற்றிக் கொள்க. 1 கிடந்தவாறும் வாராக்காலம் என நிகழ்காலமும் அடங்கிற்று. (எ- டு.) உழுது வருவான் சாத்தன் என்பது. இது வருவான் என்னும் எதிர்காலவினை கொண்டமையான் முன் உழுது என நின்ற இறந்த காலம் உழுவது மேல் என எதிர்காலத்தாயிற்று. கொடியாடித் தோன்றும் என்பது அத்தோற்றமும் ஆட்டமும் உடனிகழ்தலான் நிகழ்காலமாயிற்று. ஒன்றென முடித்தல் என்பதனான் செய்யூ, செய்பு என்பனவற்றிற்கும் இவ்வாறே மயக்கங் கொள்க. மற்றும் அவ்வினையெச்சவாய்பாடுள்ளும் காலம் மயங்குவன உளவேல் அவையும் இவ்வாற்றானே கொள்க. இச்சூத்திரம் காலவழுமைதி. இது ஒரு சொன்மயக்கம். (41)
1. இத்தொடர் சிதைந்துள்ளது. |