நிகழ்காலச்சொல் ஏனைக்காலங்களையும் உணர்த்தல்
 

242. முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்.
 

என்     -   எனின்,     எல்லாவினைச்சொற்களும்     பொருளது
உண்மையியற்கை  கூறும்வழிச்  செய்யும்  என்னும்  வினைச்சொல்லொடு
காலம் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  மூன்றுவகைப்பட்ட  நிலைமையினையுடைய   காலத்தும்
தோன்றும்     இயல்பினையுடைய    எவ்வகைப்பட்ட   பொருளையும்
நிகழ்காலத்தினைத்   தனக்குக்    காலமாகவுடைய   பிறகாலத்தினையும்
பொதியும்   பொருள்   நிலைமையிமையுடைய    செய்யும்    என்னும்
சொல்லினால் சொல்லுதலை விரும்பும் ஆசிரியன், (எ - று.)

(எ - டு.) மலை நிற்கும், யாறு ஒழுகும், தீச்சுடும் என்னும் இவை.

தீ  எத்தன்மைத்தென்றால் அதன்றன்மை எக்காலத்தும்  உளவாதலிற்
பண்டு  சுட்டது  இன்றுஞ்  சுடுகின்றது  மேலுஞ் சுடுவது  என  மூன்று
காலத்தானும்  கூறவேண்டுவதனை  நிகழ்காலத்தால்   சொல்ல   அவை
யெல்லாம் கூறியவாறாயிற்று எனக் கொள்க.

“முந்நிலைக்     காலமும்   தோன்றுமியற்கை    எம்முறைச்சொல்”
என்றமையான்   ஒருபொருள்   ஒருகாலத்தொழிலன்றி    எக்காலத்தும்
நிகழும் தொழிலியல்பு கூறும் வழியது இம்மயக்கம் எனக் கொள்க.

சொல்      என்றதற்குப்    பெயர்ப்பொருளை    என்க.    இனிச்
சொல்லெனினும்  படும்.   மெய்ந்நிலை  என்றதனாற்   பின் நிகழ்காலச்
சொல்லோடு  ஒவ்வாது   மூன்று  காலத்தையும் பொதியும் நிலைமையது
இச்செய்யுமென்னும்    சொல்     என்பது    பெறப்பட்டது.   இதுவும்
காலமயக்கவமைதி.

ஈண்டு   மயங்கியது எச்சொல்லோ எனின், நெருப்புச்சுடும் என்றவழி
சுட்டது,  சுடாநின்றது, சுடுவது என்று  மூன்றுகாலச்  சொல்லும் செய்யும்
என்பதனால்   சொல்லப்படுதலின்   அவை    மயங்கின   எனப்படும்.
இச்சுடுமென்ற சொற்றானும் தன் நிகழ்காலத்ததாய்  நிற்றலைவிட்டு  ஒரு
சொல்லுதற்கண்ணே   மூன்று   காலமும்   பட   நிற்றலின்   அதுவும்
மயங்கிற்று எனப்படும். இஃது ஒரு சொன்மயக்கம்.              (42)

******************************************************************