என் - எனின், இது வினைமுற்றுச் சொல்லது பொருள் படுநிலைமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இக்காரியத்தினைச் செய்தல் வேண்டும் என்று சொல்லப்படும் முற்றுச்சொல் இரண்டிடத்து நிலைபெறும் பொருண்மை உடைத்தாகும். அவை இரண்டிடமும் யாவை யெனின் அக்காரியத்தைச் செய்வான் தன்னிடத்தும் அவன் செய்தலை வேண்டியிருப்பான் பிறனொருவனிடத்தும், (எ - று.) (எ - டு.) சாத்தன் ஓதல்வேண்டும் என்பது. இதனுள் வேண்டும் என்னும் முற்றுச்சொல் ஒருவழிச் சாத்தன் என்பது எழுவாயாய், வேண்டும் என்னும் பயனிலையோடு முடிந்தவழி அது வேண்டுதல் சாத்தனதாயும், சாத்தன் என்னும் எழுவாய் ஓதலென்னும் சொல்லோடு முடிந்தவழி, இவன் ஓதவேண்டியிருக்குமானால் தந்தை யெனப் பிறர்மேலதாயும் நின்றவாறு அறிந்துகொள்க. இதனாற் சொல்லியது சொற்பொருள் உணர்த்தும்வழி இயல்பால் தானுணர்த்துவதனை யொழிய அடைசொற்களாற் பிறவழியும் நோக்கும் எனக் காலவழுவமைதிக்கிடையே இதுவும் ஓர் மரபு வழுவமைதி என்பது கூறியவாறாயிற்று, (45) |