என் - எனின், இயற்கை தெளிவு என்னும் பொருட்கண் எதிர்காலம், இறந்தகாலத்தோடும் நிகழ்காலத்தோடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வாராக்காலமாகிய எதிர்காலத்துப் பிறக்கும் வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மை இறப்புக்காலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானம் மிகத் தோன்றும்; யாண்டு எனின், ஒன்றனது இயற்கையினையும் ஒன்றனது தெளிவினையும் ஒருவன் சொல்லுங்காலத்து, (எ -று.) இயற்கை என்பது, வழங்குங்கால் தான் ஒன்றனை இஃது இப்பெற்றியதாகும் என்று அறிந்திருந்த இயல்பு, (எ - று.) தெளிவு என்பது, ஒரு நூல்நெறியான் இது நிகழும் எனக் கண்டு வைத்துத் துணிதல், (எ - று.) (எ - டு.) இக்காட்டுள்போகின் கூறை கோட்படுவன் என்னாது இக்காட்டில் புகின் கூறை கோட்பட்டான் எனவும், கூறை கோட்படுகிறான் எனவும் கூறுதல் ; இஃது இயற்கை. எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது கண்டுழி மழை பெய்வதாம் என்னாது பெய்தது எனவும், பெய்கின்றது எனவும் கூறுதல்; இது தெளிவு. இதுவுஞ் சொல்லொடு சொன்மயக்கம். (47) |