என் - எனின், இதுவும் வினைச்சொற்கள் நிகழும் மரபு வழூஉவமைதி கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) பிறிதொன்றனான் ஒருதொழில் செய்யப்படுவதாகிய பொருளினைத் தான் அத்தொழிலினைச் செய்ததுபோல அத்தொழில் அதன்மேற்படக் கூறுதலும் வழக்கின்கண்ணே நடக்கும் முறைமை உடையதாம், (எ- று.) (எ - டு.) இல்லம் மெழுகிற்று, சோறு அட்டது எனவரும். இனி ஒன்றெனமுடித்தல் என்பதனால் இவ்வாள் எறியும், இச்சுரிகை குத்தும் எனச் செய்தற்கு உடனாகிய கருவியைத் தான் செய்ததாகச் சொல்லுவதும், அரசன் எடுத்த ஆலயம் என்றாற்போல ஏவினானைக் கருத்தாவாகச் சொல்லுவதும் அமைத்துக்கொள்ளப்படும், எனவே, கருத்தாகக் கருத்தாவும், ஏதுக் கருத்தாவும், கருவிக் கருத்தாவும், கரும கருத்தாவும் என நான்கு வகைப்படூஉம் என்பதும், அவற்றுள் இது கரும கருத்தா என்பதும் பெறப்பட்டது. இன்னும் இதனானே உண்டல், தின்றல் என்னுந்தொழில் தன்னையும் உண்டது, தின்றது என்று கருத்தாவினைப்போலக் கூறும் வாய்பாடும் கொள்க. (48)
1. “செயப்படுபொருளைச் செய்தது போலத், தொழிற்படக் கிளத்தலும் வழக்கினுள் உரித்தே” (பொது - 49) என்பது இதனைத் தழுவிய நன்னூற் சூத்திரம். |