என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறிய ஆக்கச் சொற்றான் காரணத்தை யொழியச் சொல்லுதலுங் குற்றமில்லையென்று சொல்லுப ஆசிரியர் வழக்கினிடத்து என்றவாறு. உம்மை யெதிர்மறையாகலான் காரணம் கொடுத்துக் கூறல் வலியுடைத்து. (எ - டு.) மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவரும். செய்யுள் விதியுள்வழிச் செய்யுளென்று கூறி, வாளாதேயோதுஞ் சூத்திரமெல்லாம் வழக்கே நோக்குதல் நூற்கிடையாகலின் ‘வழக்கினுள்’ என்பது மிகை; அதனாற் செயற்கைப்பொருள் காரணங்கொடுத்து ஆக்கங்கொடாதே சொல்லுதலும், காரணமும் ஆக்கமும் இரண்டுங் கொடாதே சொல்லுதலுங் கொள்ளப்படும். (எ - டு.) கடுவுங் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல எனவும், பைங்கூழ்நல்ல எனவும் வரும். எனவே செயற்கைப்பொருள் காரணமும் ஆக்கமுங் கொடுத்தலும், காரணமொழிய ஆக்கங்கொடுத்தலும், ஆக்கமொழியக் காரணங்கொடுத்தலும், காரணமும் ஆக்கமும் இரண்டுங் கொடாதே சொல்லுதலும் என நான்குவகைத்து. இவற்றுள் முன்னையவிதியொன்றும் மரபிலக்கணம்; பின்னைய மூன்றும் மரபுவழுவமைதி. அவற்றுள் இச்சுத்திரத்தாற் கூறியது பெரும்பான்மை, இலேசினாற் கூறிய இரண்டுஞ் சிறுபான்மை யென உணர்க. இவை யமைவதற்குக் காரணம் உணர்வா ருணர்வுவகைபற்றிப்போலும். (22) |