நிகழ்காலம் இறந்த காலத்தோடு மயங்கல்
 

250.

ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்.
 

என்  -  எனின்,  இதுவும் அப்பொருட்கண் இறந்ததனோடு நிகழ்வது
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  ஒழிந்த நிகழ்காலம் இறந்ததனோடு மயங்குதலை  நீக்கார்
ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) யாம் பண்டு விளையாடுங் கா எனவரும்.

இனி    ஒன்றென முடித்தல் என்பதனால் இறந்ததனோடு எதிர்வதும்
நிகழ்வதும் மயங்கியவாறுபோல நிகழ்வதனோடு   இறந்ததுவும், எதிர்வும்,
எதிரதனோடு இறந்ததுவும் நிகழ்வதும் மயங்குமாறு கொள்க.

யாம்  இன்று  விளையாடா  நின்றது  இக்கா என்புழி விளையாடிற்று
எனவும்  விளையாடுவது  எனவுங்   கூறுதல் நிகழ்கால  மயக்கம். யாம்
நாளை   விளையாடுவது  இக்கா   என்புழி   விளையாடிற்று   எனவும்,
விளையாடா நின்றது எனவுங் கூறுதல் எதிர்கால மயக்கம்.

இவை  இதுபொழுதை   வழக்கினுள்   ஏலா   எனினும்,  இவ்வாறு
மயங்குதற்கு   இலக்கணம்   உண்மையானும்,   க  ச  த  ப  முதலிய
என்புழிச்    சொல்லுமுறை   என்பதனைச்     சொல்லிய    முறைமை
என்றமையானும் அமையும் எனக் கொள்க.                     (50)

ஆறாவது வினையியல் முற்றும்.

******************************************************************