என் - எனின், இன்னும் அவற்றிற்காவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேல் வகுக்கப்பட்டவைதாம் முன்னிடத்தும் பின்னிடத்தும் பெயர்வினையாகிய மொழிகளை அடைந்து வருதலும், அச்சொற்கள் தம்மீறு ஒருவழி எழுத்து வேறுபட்டு வருதலும், மற்றோர் இடைச்சொல் தான் நிற்குமிடத்தே நிற்றலுமாகிய அத்ததன்மையை யுடைய இலக்கணம் எல்லாவற்றிற்கும் இலக்கணமாதற்குரிய, (எ - று.) (எ - டு.) முன்னடுத்தது ; அதுமன், கேண்மியா என்பன. பின்னடுத்தது ; கொன்னூர், ஓஓதந்தார் என்ப. ஈறுதிரிந்தது ; மன்னைக் காஞ்சி, இஃதொத்தான் என்பன, பிறிதவணிலையல்; மகவினை, மடவை மன்றம்ம என்பன. மன்னைச் சொல், தில்லைச்சொல் என்பனவோ எனின், அவை பொருளுணர்த்தாது சொல் தம்மை உணர நின்றவாகலான் ஈண்டைக்கு ஆகா என்பது. மற்றென்னை திரிபு பெறுமாறு எனின், உடம்பொடு புணர்த்தல் என்பதனான் அவற்றை இவ்வாறு ஓதிய சூத்திரங்களால் பெறுதும் என்பது. (3) |