என் - எனின், இது தத்தங்குறிப்பிற் பொருள்செய்குறவற்றுள் ஒன்றன் பொருட்பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கழிவுப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஆக்கப்பொருண்மைக்கண் வரும் மன்னும், ஒழியிசைப்பொருண்மைக் கண்வரும் மன்னும் என மூன்று கூற்றதாம் என்ப மன்னென்னும் சொல்லாது பொருட்பாகுபாட்டு வேற்றுமை, (எ - று.) இவ்வாறு பொருளுணர்த்தலும் அவ்விடைச் சொற்காவதோர் இலக்கணம் என்பது. அவ்விதாரணம் உரையிற் கொள்ளப்படும். (எ - டு.) ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ (புறம். 235) இது கழிவு. பண்டு காடுமன் ; இஃது ஆக்கம். பண்டு காடு என்பதன்றோ இன்றுநாடு என்று ஆக்கமணர்த்துகின்றது எனின், அதன் பொருளை இதுவுங் கூடிநின்று உணர்த்திற்று என உணர்க. பண்டு கூரியதோர் வாண்மன் ; இஃது ஒழியிசை. இன்றோர் குறை பாடுடைத்தாயிற்று என்னுஞ் சொல் ஒழிந்தமை தோற்றுவித்து நின்றமை காண்க. (4) |